சென்னை: 650 தொகுதிகளைக் கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இதன்படி, தொழிலாளர் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றும், பல இடங்களில் முன்னிலை வகித்தும் வருகிறது. இதனால் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சி அமைக்கிறது.
இதன் மூலம் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமராக உள்ளார். அதேநேரம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம் ஆகிய மூன்றும் பிரிட்டன் தொழிலாளர் கட்சி (Labour Party) தேர்தல் அறிக்கையில் திட்டங்களாக அறிவித்து, பிரிட்டன் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. மேலும், இந்தத் திட்டங்கள் தமிழ்நாட்டு மக்களிடமும், இந்தியாவின் இதர மாநிலங்களிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் 31,008 அரசுப் பள்ளிகளில் 18.54 லட்சம் மாணவ, மாணவியர் சூடான, சுவையான காலை உணவை உண்டு மகிழ்ச்சியுடன் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர். காலை உணவு உண்ணாமல் பள்ளி செல்லும் குழந்தைகளை எண்ணி கவலை கொண்டிருந்த தாய்மார்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றனர். இத்திட்டத்தை, தெலங்கானா மாநில அரசு உட்பட பல்வேறு மாநிலங்கள் வரவேற்றுள்ளன. மேலும், கனடா நாட்டு பிரதமர் இத்திட்டத்தை வரவேற்று தம்முடைய நாட்டில் நடைமுறைப்படுத்தி உள்ளார்.
நான் முதல்வன்: நான் முதல்வன் திட்டத்தின் அடிப்படை நோக்கம் கல்விக்கும், வேலைவாய்ப்பிற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதில் உள்ளது. நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்றவர்களில் 76.4 சதவீதம் இன்ஜினியரீங் மாணவர்களும், 83.8 சதவீதம் கலை மற்றும் அறிவியல் மாணவர்களும் தொடர்ந்து வேலைவாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் 1,48,149 இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் இளைஞர்களிடமும், பெற்றோரிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது
கலைஞரின் கனவு இல்லம் திட்டம்: வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதுடன், வீடு கட்டுவதற்கான தொகையை அரசு அவரவர் வங்கிக் கணக்குகளில் செலுத்தி பயனாளிகளே தங்கள் கனவு இல்லங்களை தாங்களே உருவாக்கிக் கொள்ளும் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகப்படுத்திய இந்த மூன்று திட்டங்களையும் பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு மக்களின் ஆதரவைப் பெற்று மாபெரும் வெற்றிகண்டுள்ளது என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்? - தொழிலாளர் கட்சி ஆட்சியில் இந்தியா - பிரிட்டன் உறவு எப்படி இருக்கும்?