சென்னை: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையானது இயல்பை விட அதிகமாகப் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழையானது வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்கு மேல் தொடங்க வாய்ப்புள்ளது. இதற்கு முன்னெச்சரிக்கையாகத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பருவமழையை எதிர்கொள்ள அனைத்துத்துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில், பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் நிலவரம் குறித்து ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பருவமழைக்கு முன்பாகவே அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முந்தைய ஆட்சியில் ஏற்பட்டதுபோல், மழை பாதிப்பு இம்முறை ஏற்படாது. தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளோம்.
இதையும் படிங்க: 7 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
மிகக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பரவலாக மழை பெய்தால் சமாளிக்கலாம். ஆனால் ஒரே இடத்தில் அதிக மழை பெய்தால் சற்று சிரமம். ஒரே இடத்தில் அதிக மழை பெய்வது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகளுடன் பேசி வருகிறோம். அவசரக் கால செயல்பாடு மையங்கள் மூலம் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் என்னென்ன உதவிகள் தேவை என்பதையும், அதைக் கண்டறியவும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
பேரிடர் எச்சரிக்கைகளை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் வகையில் அரசால் உருவாக்கப்பட்டுள்ள TN-Alert செயலியும் தயார் நிலையில் உள்ளது. மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கான பேரிடர் மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். எந்தப் பகுதியில் பாதிக்கப்படும் என்று கணிக்கப்படுகிறதோ, அங்கு பேரிடர் மீட்புக் குழுவினரை முன்கூட்டியே அனுப்பவிருக்கிறோம்.
மேலும், கடந்த முறை போன்று இல்லாமல், மழைக்காலத்தில் பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகள் கண்காணிக்கப்பட்டு, வடகிழக்கு பருவமழையைச் சந்திக்கத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்