சென்னை: தேசிய கல்விக் கொள்கை திட்டத்தின் கீழ் வரும் பி.எம்.ஸ்ரீ (PM SHRI) பள்ளிகளை தமிழகத்தில் திறக்க தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) செய்துள்ளது என இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் X வலைத்தளப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்திய அரசின் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "தேசிய கல்விக் கொள்கை திட்டத்தின் கீழ் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை தமிழ்நாட்டில் திறப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய அரசின் கல்வி அமைச்சகத்துடன் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 முதல் 2025 கல்வியாண்டில் தமிழ்நாட்டில் பள்ளிகள் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன் படி, இந்திய அரசின் கல்வி அமைச்சகத்துக்கும், தமிழக அரசுக்கும் இடையே கல்வி சம்பந்தமாக வலுவான உறவுகள் ஏற்படும். மேலும், இந்த பள்ளிகள் மூலம் மாணவர்கள் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்ய முடியும். தமிழ்நாட்டின் இந்த முயற்சியை முழு மனதுடன் வரவேற்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித் துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட இயக்குநர் ஆர்த்தி ஆகியோர் உடன், மத்திய கல்வித் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சர் தர்மேந்திர பிரதானை டெல்லியில் நேரில் சந்தித்து, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழுவால் (Project Approval Board) 2023-2024ஆம் கல்வியாண்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிதியில் 3வது மற்றும் 4வது தவணைத் தொகையான ரூ.1,138 கோடி தற்போது வரை வழங்கப்படாமல் உள்ளதாகவும், இந்த தொகையை விரைவாக தமிழ்நாடு அரசுக்கு வழங்கிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தருமபுரம் ஆதீனம் விவகாரம்; பாஜக மாவட்டத் தலைவர் மும்பையில் கைது!