சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 57 பேர் (தற்போதைய நிலவரப்படி 59 பேர் உயிரிழப்பு) உயிரிழந்தது தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி வழக்கறிஞர் சமூக நீதி பேரவைத் தலைவர் வழக்கறிஞர் கே.பாலு தாக்கல் செய்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது அதற்கான அறிக்கை தயாராக உள்ளது. அந்த வழக்கு நாளை (ஜூன் 26) மீண்டும் விசாரணைக்கு வருகிறது" எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய மனுதாரர் கே.பாலு, "நீதிமன்றம் அமைந்திருக்கும் பகுதியிலேயே கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வருகிறது. முதலில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் இறந்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் தவறான அறிவிப்பால் கூடுதல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்புள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அதிமுக தாக்கல் செய்த வழக்குடன் சேர்த்து இந்த வழக்கையும் நாளைக்கு (ஜூன் 26) விசாரணைக்கு பட்டியலிடும்படி உத்தரவிட்டனர்.