சென்னை: தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள வருகை தந்துள்ள பல்துறை மத்திய குழு - மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை இணை செயலாளர் ராஜேஷ் குப்தா, மத்திய விவசாய மற்றும் உழவர் நலத்துறை இயக்குநர் கே.பொன்னுசாமி, மத்திய நிதித்துறை இயக்குநர் சோனாமணி அவுபம், மத்திய ஜல்சக்தி துறை இயக்குநர் ஆர்.சரவணன், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை முன்னாள் பொறியாளர் தனபாலன் குமரன், மத்திய எரிசக்தித் துறை உதவி இயக்குநர் ராகுல் பாட்ச்கேட்டி, மத்திய ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர் பாலாஜி ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (டிச.06) தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.
இது குறித்து தமிழக அரசு தரப்பில் செய்தி குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், "தமிழ்நாட்டில் நவம்பர் 26 முதல் வீசத் தொடங்கிய ஃபெஞ்சல் புயலின் காரணமாக வரலாறு காணாத அதிக கனமழை பொழிவு ஏற்பட்டு கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு பெரும் சேதத்தையும் உண்டாக்கியது.
இதனை அடுத்து, இந்திய பிரதமருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் 02ஆம் தேதி அன்று எழுதிய கடிதத்தில், ஃபெஞ்சல் புயலினால் ஏற்பட்ட சேதங்களிலிருந்து தமிழ்நாட்டை மீட்க முதற்கட்ட ஆய்வின்படி தற்காலிக சீரமைப்பு பணிகளுக்கு ரூ.2,475 கோடி தேவைப்படுகிறது என குறிப்பிட்டார்.
அத்தோடு, பாதிப்புகளின் அளவு மற்றும் மறுசீரமைப்பின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, இடைக்கால நிவாரணமாக ரூ.2,000 கோடியினை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி கேட்டுக் கொண்டதோடு, உடனடியாக ஒன்றிய பல்துறை குழுவினை அனுப்பி சேத விவரங்களை கணக்கிடவும் வலியுறுத்தியிருந்தார்.
இதையும் படிங்க: குடிநீரில் கழிவுநீர் கலந்ததாகக் கூறப்படும் சம்பவம்: 2 பேர் உயிரிழப்பு - அரசு இழப்பீடு வழங்க கோரிக்கை!
இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க, மத்திய பேரிடர் மேலாண்மை இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான பல்துறை மத்திய குழுவினர் தமிழ்நாடு முதலமைச்சரை இன்றைய தினம் (டிச.06) தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு முதலமைச்சர், மத்திய குழுவிடம் ஃபெஞ்சல் புயலின் தற்காலிக மற்றும் நிரந்தர மறு சீரமைப்புப் பணிகளுக்கு ரூ.6,675 கோடி வழங்கிட வேண்டி முழு விவரங்கள் அடங்கிய கோரிக்கை மனுவினை அளித்தார். மேலும், மத்திய குழுவிடம் தமிழ்நாட்டிற்கு தேவையான நிவாரணப் பணிகள், நிரந்தர மற்றும் தற்காலிக மறு சீரமைப்புப் பணிகளுக்காக நிதியினை பெற்றுத்தர விரைந்து பரிந்துரைத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிருவாக ஆணையர் ஆகியோர் மத்திய குழுவிடம் ஃபெஞ்சல் புயல் சேத விவரங்கள் குறித்து விளக்கப் படக் காட்சி மூலம் விளக்கினார்கள். முக்கிய அரசு துறை செயலாளர்களுடன் கலந்து ஆலோசித்து மத்திய குழுவினர் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கள ஆய்வு செல்வது பற்றி முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, மத்திய குழுவினர் நாளை (டிச.07) மற்றும் நாளை மறுநாள் (டிச.08) ஆகிய தேதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் புயல் மற்றும் வெள்ள சேதத்தினை பார்வையிட உள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.