சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று (மே 10) வெளியான நிலையில், துணைத் தேர்வுகளின் தேதியும் அதற்கான விண்ணப்பம் குறித்தும் அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
துணைத்தேர்வு: இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, 'பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ஏப்ரல் 2024 பொதுத்தேர்வினை எழுதி தேர்ச்சிப் பெறாத மற்றும் தேர்விற்கு வராத மாணவர்களுக்கான துணைத்தேர்வுகள் ஜூலை மாதம் 2ம் தேதி முதல் 8ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு ஏப்ரல் 2024 பொதுத்தேர்வினை எழுதி தேர்ச்சிப்பெறாத பள்ளி மாணவர்கள் தங்கள் படித்த பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களிலும் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
125 ரூபாய் கட்டணம்: அறிவியல் செய்முறைத் தேர்விற்கு அனைத்துப் பாடங்களையும் எழுத உள்ள நேரடித் தனித்தேர்வர்கள் (முதல்முறையாக அனைத்துப் பாடங்களையும் தேர்வு எழுத இருப்பவர்கள்) ஏற்கனவே 2012-க்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும், 2024 பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் வருகைப் புரியாதவர்கள் அறிவியல் செய்முறைப் பாட பயிற்சி வகுப்பில் சேர மே 16ம் தேதி முதல் 24ம் தேதி வரையில் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு சென்று 125 ரூபாய் கட்டணமாக செலுத்தி பெயர்களைப் பதிவு செய்து ஒப்புகை சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.
அனுமதி சீட்டு கட்டாயம்: இந்த அனுமதி சீட்டை காண்பித்தால் மட்டுமே அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பிற்கு அனுமதிக்கப்படுவர். மாவட்ட கல்வி அலுவலகத்தில் அறிவியல் பாட செய்முறைத் தேர்விற்கான ஒப்புகைச் சீட்டை காண்பித்தப் பின்னரே தனித்தேர்வர்கள் தேர்வு எழுத விண்ணப்பம் செய்ய முடியும்.
தனித்தேர்வர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய அமைக்கப்பட்டுள்ள மையங்களின் விபரம் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் ஜூன் 3 மற்றும் 4 ஆகியத் தேதிகளில் விண்ணப்பக்கட்டணத்துடன் கூடுதலாக 500 செலுத்தி விண்ணப்பிக்கலாம். 2023-24 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெறாத , வருகைப் புரியாத மாணவர்கள் சிறப்பு கட்டணம் செலுத்தத்தேவையில்லை.
மேலும், விபரங்களையும், தேர்வுக்கால அட்டவணையையும் www.dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்' என அதில் கூறியுள்ளார்.
15,844 மாணவர்கள் ஆப்சென்ட்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதுவதற்கு 9,10,148 பள்ளிமாணவர்களும் விண்ணப்பம் செய்ததில், 15,844 மாணவர்கள் வருகைப் புரியவில்லை. தனித்தேர்வர்கள் 32,348 பேரில் 2236 பேர் வருகைப்புரியவில்லை. மேலும் தேர்வு எழுதிய 8,94,264 மாணவர்களில் 8,18,743 மாணவர்கள் தேர்ச்சிப்பெற்றுள்ளனர். 75,521 மாணவர்கள் தேர்ச்சிப்பெறவில்லை. தேர்வில் தேர்ச்சிப்பெறாத மற்றும் வருகைப் புரியாத மாணவர்கள் துணைத்தேர்வில் பங்கேற்க முடியும். மேலும் இவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு அட்டவணை
வ.எண் | தேதி | பாடப்பிரிவு |
---|---|---|
1. | ஜூலை 2ம் தேதி | தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள் |
2. | ஜூலை 3ம் தேதி | ஆங்கிலம் |
3. | ஜூலை 4ம் தேதி | கணக்கு |
4. | ஜூலை 5ம் தேதி | அறிவியல் |
5. | ஜூலை 6ம் தேதி | விருப்ப மாெழிப்பாடம் |
6. | ஜூலை 8ம் தேதி | சமூக அறிவியல் |
இதையும் படிங்க: அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு அனுமதி - பள்ளிக்கல்வித்துறை