சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டம் தயாரித்தல், கண்காணித்தல் ஆகியவற்றுக்காக புதிதாக சட்டம் உருவாக்குவதற்கான மசோதாவை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்தார்.
இதைத் தொடர்ந்து, இந்த சட்ட மசோதா ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இந்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்த மாநில அளவில் முதலமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்படும்.
இந்தக் குழுவில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், துறை சார்ந்த செயலாளர்கள், நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர். இந்தக் குழுவானது ஆண்டுக்கு ஒரு முறை கூடி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்ட ஒப்புதல் வழங்குதல் மற்றும் கொள்கைகள் உருவாக்குவது தொடர்பாக அறிவுறுத்தல் வழங்கும்.
இந்த குழுவிற்கு கீழ், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தலைமையில் ஒரு குழு உருவாக்கப்படும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டங்களை உருவாக்குவது, ஏற்கனவே உள்ள திட்டங்களைக் கண்காணிப்பது, தரவுகளை சேகரிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து பணிகளையும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஒருங்கிணைக்கும். மாவட்ட அளவில் திட்டங்களைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக் குழு உருவாக்கப்படும்.
இதையும் படிங்க: ரூ.78.67 கோடியில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு! - Kuruvai Cultivation Scheme