திருச்சி: கொல்கத்தா தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவ சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.
மேலும், நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில், திருச்சி மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஒன்றிணைந்து அமைதிப் பேரணி நடத்தினர். இந்த பேரணியானது மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைப் பகுதியில் இருந்து தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது.
இதில் மருத்துவர்கள் தங்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், பெண் மருத்துவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும், பெண் மருத்துவரை படுகொலை செய்தவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய கண்டன பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணியில் சென்றனர்.
இது குறித்து இந்திய மருத்துவ சங்கம் துணைத் தலைவர் குணசேகரன் கூறியதாவது, “எங்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி இந்த அமைதிப் பேரணியை நடத்துகிறோம். தமிழகத்தில் பெண் மருத்துவர்களுக்கு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. அந்த பயத்தைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
அதேபோல், இந்திய மருத்துவர் சங்கம், தமிழ்நாடு அரசு மருத்துவ சங்கம் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இணைந்து சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் ஒரு நாள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் மற்றும் அமைதி ஊர்வலத்தை நடத்தினர்.
இதில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் இன்று காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை தங்களது பணியினை புறக்கணித்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : கொல்கத்தா பெண் மருத்துவர் விவகாரம்; கல்லூரி முன்னாள் முதல்வரிடம் சிபிஐ விசாரணை! - Kolkata Doctor Case Update