சென்னை: கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தலைமைச் செயலாளர் முருகானந்தம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உள்துறை மற்றும் சுகாதாரத் துறை மூத்த அலுவலர்களுடன் ஆய்வு நடத்தி ஆலோசனைகள் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரிகளில் வளாகங்களில் சிசிடிவி கேமராக்களை அதிகப்படுத்திட வேண்டும். போலீசார் தொடர்ச்சியாக மருத்துவமனைகளில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி.
இது குறித்து ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, "தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பாதுகாப்புடன் உள்ளனர். மருத்துவக் கல்லூரிகளில் 2990 பாதுகாப்பு காவலர்கள் உள்ளனர். அவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள புற காவல் நிலையங்களில் தற்பொழுது 3 காவலர்கள் உள்ளனர். அவர்களின் எண்ணிக்கையை ஒரு ஷிப்ட்டிற்கு 3 பேர் வீதம் 9 பேர் நியமிக்கப்பட உள்ளனர். தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளின் படி 25 சிசிடிவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
தற்பொழுது 3026 சிசிடிவி கேமராக்கள் 36 மருத்துவக் கல்லூரியில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு மருத்துவக் கல்லூரிக்கு 100 முதல் 160 வரையில் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் இயக்கப்பட்டு, கண்காணிக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகம் வார்டுகள், வழித்தடங்கள், பணி அறைகள் மற்றும் அனைத்து முக்கியப் பகுதிகளிலும் சரியான முறையில் விளக்குகள் பொருத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "அனைத்து மருத்துவமனைகளிலும் ஒப்பந்தப் பாதுகாப்பு பணியாளர்களின் வருகையை பயோமெட்ரிக் முறையின் மூலம் கண்காணிக்க வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் செல்வது போல், போலீசாரும் மருத்துவமனை வளாகத்தில் தொடர்ந்து ரோந்துப்பணி மேற்கொள்ளவேண்டும்.
அனைத்து மருத்துவ பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்களும் உள்ளிட்டோர் அவசர உதவி தேவைப்படும்போது காவல் உதவி செயலி மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாகச் செய்தி அனுப்பலாம். மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் விடுதிகளில் 24 மணி நேரமும் காவலர்கள் இருக்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை வழங்கி உள்ளோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிசிலியன் நகரா சென்னை மெரினா? சென்னை தினத்தில் Marina Beach பற்றி அறியாத முக்கிய தகவல்கள்!