சென்னை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு வடக்கு, தெற்கு மாவட்டம் சார்பாகச் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் சென்னை தாம்பரத்தில் இன்று (மார்ச் 4) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் ரூபி மனோகர், ராஜேஷ்குமார், தங்கபாலு உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, "காஞ்சிபுரம் நாடாளுமன்றம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தேர்தலில் கடந்த முறையைவிட, இம்முறை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் இந்தியா கூட்டணி (INDIA Alliance) வெற்றி பெற வேண்டும் என சிறப்பு பயிற்சி நடைபெற்றுள்ளது. இன்று பிரதமர் மோடி சென்னை வர உள்ளார். மேலும் அவர் கல்பாக்கம் செல்வதாக தகவல் உள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு என மோடி எங்கு போனாலும், அங்கெல்லாம் கருப்புக் கொடி காட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளில் மிகப்பெரிய ஆபத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் குஜராத் மீனவர்களுக்கு ஒரு நீதி, தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஒரு நீதியை மோடி கடைப்பிடிக்கிறார். குஜராத் மீனவர்களுக்கு எவ்விதமான பிரச்னையும் இல்லை.
ஆனால், தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள், தொடர்ந்து படகுகள் பறிமுதல் செய்யப்படுகிறது. வலைகள் கிழிக்கப்படுகின்றன. நமது எல்லைப்பகுதிக்கு வந்து மிகப்பெரிய எச்சரிக்கை விடுத்துச் சென்றனர். இந்த மோடி அரசு, எல்லா மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு ஆட்சியை செய்து கொண்டிருக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வருகையின்போது கருப்புக் கொடி காட்டப்படும்' என்று தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் பாதயாத்திரை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, 'அது கால்களால் நடந்த உண்மையான பாதை யாத்திரை; அண்ணாமலை செய்ததுபோல, சொகுசு வாகனங்களில் மேற்கொண்ட யாத்திரை கிடையாது. இதற்கு ஆதரவு கிடைத்திருக்கிறது. யாத்திரையின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்கிறார். ஆகையால் ஆட்சி மாற்றம் என்பது உறுதி.
இந்தியா கூட்டணி வராது பிசுபிசுத்துப் போய்விடும் என்று கூறினார்கள். ஆனால், அனைத்து கட்சிகளுடனும் இணைந்து வெற்றிகரமாக குறைந்தபட்சம் 350 இடங்களுக்கு மேல் இந்தியா கூட்டணி வெற்றியடையும்' என்று பதிலளித்தார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுமா? என்ற கேள்விக்கு, 'தொண்டர்கள் காங்கிரஸ் சார்பாக ராகுல் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிட வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளனர். அது நமது தலைவர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும். எங்கள் தலைவர் ராகுல் காந்தி நிற்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டால் மு.க.ஸ்டாலின் அவரை அழைத்துக் கொடுத்து விடுவார். எத்தனை தொகுதி என்பது முக்கியமில்லை, இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும்.
எங்களுக்குள் எந்த இழுபறியும் இல்லை. எங்களுடைய பலம் எங்களுடைய உயரம் எங்களுக்குத் தெரியும். அதை திமுக தெரிந்து வைத்துள்ளது. எங்களை யாரும் குறைத்து மதிப்பிட மாட்டார்கள். குறிப்பாக, காங்கிரஸ் பேரியக்கத்தை மு.க.ஸ்டாலின் குறைத்து மதிப்பிட மாட்டார் என உறுதி கூறினார்.
குறிப்பாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவது குறித்து கேட்டபோது, உண்மையிலேயே சட்டம், ஒழுங்கை நாம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற பாதுகாப்பற்ற சூழல் ஏற்படக்கூடாது என்பதுதான் காங்கிரஸின் கருத்து.
யார் இதன் பின்னால் இருந்து இயக்குகிறார்களோ? அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் காவல்துறை இது போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் எங்கேயும் நடக்காது என்பதை காவல்துறை உறுதி செய்யவேண்டும். அனைத்து ஆட்சிகளிலும் இதுபோன்ற கொலை சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை கட்சி ரீதியாக பேச வேண்டியது இல்லை. பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசின் கடமை, காவல்துறையின் பொறுப்பு' எனத் தெரிவித்தார்.