திருச்சி: தமிழ்நாடு அனைத்து கல்லூரி பேராசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தமிழரசன் தலைமையில் நேற்று திருச்சியில் நடைபெற்றது. மேலும், இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனைத்து கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தமிழரசன், "தமிழ்நாட்டில் சுமார் 2,331 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப 2019ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் விளம்பரம் வெளியிட்டது. அதன் அடிப்படையில், இந்த பணியிடங்களுக்கு சுமார் 30 ஆயிரம் பேர் வரை விண்ணப்பம் செய்திருந்தனர்.
அந்த விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து வந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் அதை ரத்து செய்துவிட்டது. அதற்குப் பதிலாக கடந்த மார்ச் மாதம் 4 ஆயிரம் உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதை எதிர்த்து அனைத்து தனியார் கல்லூரி ஆசிரியர்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், "2019ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்தது ஏற்புடையது அல்ல என்றும், மீண்டும் அந்த அறிவிப்பின்படி, பணி நியமனம் செய்யும் பணிகளைத் தொடர வேண்டும் அது குறித்து அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டிருந்தது.
மேலும், கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் 15 என்றும், தனியார் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பணிபுரிபவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது என்று அறிவித்திருப்பது பாகுபாடுடையது மற்றும் சட்டத்திற்குப் புறம்பானது. எனவே, அந்த அறிவிப்பாணையை நீதிமன்றம் ரத்து செய்தது.
ஆனால், நீதிமன்ற தீர்ப்பை உயர்கல்வித்துறை இதுவரை செயல்படுத்தவில்லை. இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். நீதிமன்றத்தையே அவமதிக்கும் விதமாக நடந்து கொள்ளும் உயர் கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னையில் முதலமைச்சரைச் சந்தித்து விரைவில் மனு கொடுக்க உள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "இந்தியாவை வல்லரசாக மாற்ற என் மூலம் தெய்வீக சக்தி செயல்படுகிறது"- பிரதமர் மோடி!