சென்னை: ஆந்திராவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக, மே 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், ஆந்திராவில் அரசியல் கட்சிகள் பலவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர முதலமைச்சருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி நேற்று (சனிக்கிழமை) விஜயவாடாவின் சிங் நகர் தாபா கோட்லா மையத்தில் நடைபெற்ற வாகன பேரணி மூலம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த நிலையில், அவர் மீது அடையாளம் தெரியாத நபர் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் அவரது நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக பிரச்சாரம் பேருந்தில் இருந்த மருத்துவர்கள் முதலமைச்சர் ஜெகன் மோகனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். சிறிது நேரத்திற்கு பிறகு அவர் தனது பேரணியை தொடங்கியுள்ளார். இதனையடுத்து, ஜெகன் மோகன் ரெட்டி நெற்றியில் காயத்துடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து ஜெகன் மோகன் மீது கல்வீசியது யார்? என்பது குறித்த போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கல்வீச்சு சம்பவத்தின் பின்னணியில் தெலுங்கு தேசம் கட்சி (TDP) இருப்பதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீதான கல்வீச்சு சம்பவத்துக்கு கண்டனங்கள். அரசியல் வேறுபாடுகள் வன்முறையாக மாறக்கூடாது. ஜனநாயக நடவடிக்கைகளில் ஈடுபடும்போது நாகரீகத்தையும், பரஸ்பர மரியாதையையும் நிலைநாட்டுவோம். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கோவையில் ஸ்வீட் வாங்கிய ராகுல் காந்தி.. பணியாளர்கள் பகிர்ந்த நெகிழ்ச்சி தகவல்கள்! - Lok Sabha Election 2024