சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. இதில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நினைவு நாணயத்தை வெளியிட, அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.
இதனையடுத்து, விழா மேடையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "என்னுடைய உணர்வுகளை எப்படி விவரிப்பது என்று சொல்ல முடியாத மகிழ்ச்சியில் நான் இப்போது இருக்கிறேன். நம்மை எல்லாம் ஆளாக்கியவரை சிறப்பு செய்யும் வகையில் நாணயம் வெளியிடப்படுகிறது.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா#CMMKSTALIN | #TNDIPR | #கலைஞர்100 |@CMOTamilnadu | @mkstalin |@Udhaystalin |@mp_saminathan | pic.twitter.com/MRtrLDUWYG
— TN DIPR (@TNDIPRNEWS) August 18, 2024
'நா-நயம்' மிக்க தலைவரான மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நாணயம் வெளியிடப்படுவது மிகமிகப் பொருத்தமானது. நூற்றாண்டு விழா நாயகருக்கு 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது. இதுவரை நாம் கொண்டாடினோம். இதோ இந்தியாவே கொண்டாடுகிறது என்பதன் அடையாளம் தான் இந்த விழா. இதுபோன்ற எத்தனையோ சிறப்புகளுக்குத் தகுதியானவர் தான் கருணாநிதி.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் கருணாநிதியின் திருவுருவப் படத்தை அன்றைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். ஒமந்தூரார் வளாகத்தில் உள்ள திருவுருவச் சிலையை, அன்றைய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு திறந்து வைத்தார்.
திமுக தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்ட திருவுருவச் சிலையை மாநிலங்களவை உறுப்பினர் சோனியா காந்தி திறந்து வைத்தார். முரசொலி அலுவலகத்தில் அமைக்கப்பட்ட திருவுருவச் சிலையை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார். இன்று கருணாநிதியின் நாணயத்தை நமது நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட வருகை தந்துள்ளார்.
இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவல் அரணாக இருந்த கருணாநிதியின் உருவம் தாங்கிய நாணயத்தை வெளியிட, இந்திய நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் வந்திருப்பது மிகமிகப் பொருத்தமானது தான். 80 ஆண்டு காலம் பொது வாழ்க்கையில் இயங்கி, அதில் அரை நூற்றாண்டு காலம் தமிழ்நாட்டின் திசையைத் தீர்மானித்த கருணாநிதிக்கு இந்தியாவே வந்து சிறப்பித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
கருணாநிதி நிறைவடைந்த நாள் முதல், நாள்தோறும் அவர் புகழைத் தான் போற்றிக் கொண்டிருக்கிறோம். கடந்த ஓராண்டு காலமாக அவரது நூற்றாண்டை முன்னிட்டு, அவரது சாதனைகளைச் சொல்லும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினோம். அவரைப் போற்றும் விதமாக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினோம்.
கடந்த ஆக.15ஆம் தேதியன்று, நாட்டின் 78வது விடுதலை நாளை நாம் கொண்டாடினோம். அன்று நான் மட்டுமல்ல, நாட்டிலுள்ள அத்தனை மாநில முதலமைச்சர்களும் கொடியேற்றினார்களே, அந்த உரிமையை பெற்றுத் தந்தவரும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர் சொன்னாரே..
"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப்படும்”
என்று அப்படி ஆட்சி நடத்தியவர் கருணாநிதி. அதனால் தான் இன்று அகில இந்தியாவும் போற்றும் தலைவராக கருணாநிதி உயர்ந்து நிற்கிறார். 'செயல்படுவதும், செயல்பட வைப்பதும் தான் அரசியல்' என்ற இலக்கணத்திற்கு இலக்கியமாக இருந்தவர் கருணாநிதி. ஒரு கட்சியின் தலைவராக, ஒரு மாநிலத்தின், நாட்டின் தலைவராக, எப்போதும் சிந்தித்தார், செயல்பட்டார்.
கடந்த 1971ஆம் ஆண்டு இந்தியாவை பாகிஸ்தான் அச்சுறுத்தியபோது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாகிஸ்தான் படையெடுப்பு கண்டன தீர்மானம், 1972-ஆம் ஆண்டு பாகிஸ்தான் போரின்போது அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் நாட்டுப் பாதுகாப்புக்காக ஆறு கோடி ரூபாய் நிதி. போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிதி மற்றும் நிலம். 1999ஆம் ஆண்டு கார்கில் போரின் போது இந்தியாவிலேயே அதிக தொகையை, அன்றைய பிரதமர் வாஜ்பாயிடம் மூன்று தவணைகளாக மொத்தம் 50 கோடி ரூபாய் வழங்கியவர்.
மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்த அதே வேளையில், நாட்டின் பாதுகாப்பு என்று வருகிற போது கை கொடுத்தவர். நாணயம் என்பதற்கு இன்னொரு பொருளும் இருக்கிறது. கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்குப் பெயரும் நாணயம் தான். 'சொன்னதைச் செய்வோம் செய்வதைத்தான் சொல்வோம்' என்று சொல்லி, சொன்னதையெல்லாம் செய்து காட்டியது.
அவரது வழியில் இன்றைய திராவிட மாடல் அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி கருணாநிதி அரசாகச் செயல்பட்டு வருகிறது. சட்டசபையை அதிகார அமைப்பாக இல்லாமல் சமூகத்திற்கு நன்மை செய்யும் அமைப்பாகக் கருத வேண்டும் என்றார் பெரியார். அப்படித்தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
இது எனது அரசல்ல, நமது அரசு. ஒரு கட்சியின் அரசல்ல, ஒரு இனத்தின் அரசு. திராவிடக் கருத்தியல் கொண்ட அரசு. இதனை என்னுள் ஏற்படுத்தியவர் கருணாநிதி. ஒரு மனிதனின் வாழ்க்கை அவனது மரணத்திற்குப் பிறகு கணக்கிடப்பட வேண்டும் என்று சொன்னவர் கருணாநிதி. இன்றைக்கு அவரது முகம் தாங்கிய நாணயத்தில் 'தமிழ் வெல்லும்' என்ற சொல்லும் இடம்பெற்றுவிட்டது என்றால், இதுவும் அவரின் சாதனை தான்" எனப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திமுக பொதுச் செயலாளர் துரை முருகன், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயரதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
![ஈடிவி பாரத் தமிழ்நாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/18-08-2024/22238339_whatsup.jpg)
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: சென்னையில் போக்குவரத்து மாற்றம்! எந்தப் பக்கம்லாம் போகத் தடை தெரியுமா? - Chennai Traffic Changes