கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் மாவட்டம், விளாங்குறிச்சி சாலையில், எல்காட் வளாகத்தில் ரூ.158.32 கோடி மதிப்பீட்டில் புதிய தகவல் தொழில் நுட்பக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் புதிய திட்டங்களை துவக்கி வைப்பதற்கும், நடைபெற்று வரும் பணிகளை பார்வையிடவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக கோயம்புத்தூர் வந்தார். விமான நிலையத்தில், மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி, நகராட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உள்ளிட்ட அமைச்சர்கள் வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து கட்சியினர் விமான நிலையத்திலிருந்து மருத்துவக் கல்லூரி வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வழிநெடுகிலும் திரண்டு இருந்த திமுக தொண்டர்களின் வரவேற்பை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார். பின்னர் விளாங்குறிச்சி சாலையில், எல்காட் வளாகத்தில் ரூ.158.32 கோடி மதிப்பீட்டில் 8 தளங்களுடன் 2,94,382 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதையும் படிங்க : “சீமான், சாட்டை துரைமுருகனால் என் உயிருக்கு ஆபத்து” - திருச்சி சூர்யா மனு!
இதுகுறித்து எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கண்ணன் கூறுகையில், "கோயம்புத்தூரில் திறக்கப்பட்ட இந்த கட்டடம் எல்காட் நிறுவனத்தின் ஒன்பதாவது கட்டடம். 3,500 பேர் பணிபுரியும் வகையில், தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
இந்த கட்டடம் உடனடியாக பயன்பாட்டிற்கு வருகிறது. இன்று பல்வேறு நிறுவனங்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும்" என தெரிவித்தார். மேலும், இந்நிகழ்வில், வாரப்பட்டி ராணுவப் பூங்காவில் அமைய உள்ள நிறுவனங்களுக்கும் இட ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டது.
இதுகுறித்து ராணுவ தளவாட உற்பத்தியாளர் சங்க இயக்குனர் பழனிக்குமார் கூறுகையில், "வாரப்பட்டி ராணுவ தொழில் பூங்காவிற்கு டிட்கோ, சிப்காட் மூலம் இடம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ராணுவத்திற்கு தேவையான உபகரணங்களை பெரிய நிறுவனம் மட்டுமே செய்ய முடியும் என்ற நிலை மாறி சிறிய நிறுவனங்களும் ராணுவ உபகரணங்களை செய்யமுடியும். வாரப்பட்டியில் அமைய இருக்கும் ராணுவப் பூங்காவில் 65 ஏக்கரில் 110 நிறுவனங்கள் வரை வர இருக்கிறது" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்