சென்னை: நாடு முழுவதும் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று, வாக்குகள் மிகவும் தீவிரமாக எண்ணப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 39 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்புடன் சுமார் 1 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையைப் பொறுத்தவரை, மத்திய சென்னை லயோலா கல்லூரியிலும், வட சென்னை இராணி மேரி கல்லூரியிலும், தென் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 3 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, இன்று காலையில் இருந்து வாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடைபெற்று வருவதாகவும், எந்த விதமான புகார் இதுவரை வரவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் வரும் 6ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும், அதன் பிறகு விலகிக் கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.
திருநெல்வேலியில் 30 சதவீதம் தபால் வாக்குகள் செல்லாது என்று அறிவித்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, இது போன்ற புகார்களுக்கு அந்தந்த நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள். வாக்கு மையத்திலிருந்து நேரடியாக தகவல் வெளியிடப்படும் என்றும், இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் அனைத்தும் பதிவு செய்யப்படும் என்றார்.
இதையும் படிங்க: 'முடிவை வரவேற்கிறேன்'... கனத்த இதயத்துடன் வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறிய நயினார் நாகேந்திரன்! - Lok Sabha Election Results 2024