சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நாளை மறுதினம் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரங்கள் ஓய்வு பெறுகின்றன.
இந்த சூழ்நிலையில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, “தமிழகத்தில் தற்போது வரை ஆயிரத்து 297 கோடி மதிப்பிலான ரொக்கம், போதைப் பொருட்கள், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் 18ம் தேதி வரை தபால் வாக்கு அளிக்கலாம். பயிற்சி மையங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகங்களுக்குச் சென்று தங்களின் தபால் வாக்குகளைப் பதிவு செய்யலாம்.
நாளை மாலை 6 மணி வரை தபால் வாக்குகளைப் பதிவு செய்யலாம். இந்த தபால் வாக்குகளைச் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு எப்படி கொண்டு செல்வது என்பது தொடர்பாகத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பேசி முடிவு செய்வார்கள். இந்த தபால் வாக்குகளை ஜூன் 3ஆம் தேதி வரை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மூலம் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பத்து வாக்குச்சாவடி மையத்திற்கு ஒரு மண்டல அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதன் படி, 6170 மண்டல குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு குழுவில் தேர்தல் நடத்தும் பணியாளர்கள், காவலர்கள், பெல் நிறுவனத்தின் பொறியாளர்கள் ஆகியோர் இருப்பார்கள். வாக்குப்பதிவு நாள் மற்றும் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் அன்று செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிடலாம். ஊடக கண்காணிப்புக் குழுவிடம் உரிய அனுமதி பெற்று விளம்பரங்களை வெளியிடலாம். தொலைக்காட்சிகளில் விளம்பரம் வெளியிடத் தடை உள்ளது. சிறைகளில் உள்ளவர்கள் தபால் வாக்கு மூலமாக வாக்களிக்கலாம்.
சிறையில் உள்ள கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் சம்பந்தப்பட்ட சிறை கண்காணிப்பாளர்களிடம் இது தொடர்பான உரிய விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். செந்தில் பாலாஜி வாக்களிப்பது குறித்து அந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட்டு இருந்தால், தபால் வாக்கு அளிக்கலாம். இந்த விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுப்பி வைக்கப்படும். அந்த தேர்தல் நடத்தும் அலுவலர் சம்பந்தப்பட்ட நபருக்கு தபால் வாக்கு அளிப்பது தொடர்பாக முடிவு எடுப்பார்.
தமிழகத்தில் 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் இன்று மாலை நிறைவுபெற்று, சோதனை ஓட்டம் நடைபெறும். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 65% வாக்குச்சாவடிகள் வெப் கேமரா முறையில் கண்காணிக்கப்பட உள்ளது” என்று தெரிவித்தார்.