சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், புதிய அறிவிப்புகள் மற்றும் அரசாணைகளை வெளியிடக் கூடாது எனத் தமிழக அரசுத் துறைகளின் செயலர்களுக்கு, தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "தேர்தல் நடக்கும் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட பின், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். எனவே அதன்பின், எந்த ஒரு புதிய அறிவிப்போ, அரசுத் திட்டம் தொடர்பான புதிய ஆணையோ பிறப்பிக்கக் கூடாது.
முந்தைய தேர்தல்களில், முன் தேதியிட்டு, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் ஓரிரு தினங்களில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத் தவிர்க்கும் விதமாக, சம்பந்தப்பட்ட துறைகளின் செயலர்கள், அரசாணை தொடர்பான பதிவேட்டில், இறுதி அரசாணை வெளியிட்ட பின், ஒரு கோடிட்டு முடிக்க வேண்டும்.
அதை நகல் எடுத்து, தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இதன் மூலம் தேவையற்ற சர்ச்சையைத் தவிர்க்கலாம். குறிப்பாக, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 2 மணி நேரத்துக்குள் அவை அனுப்பப்பட வேண்டும். இது தொடர்பான அறிவுறுத்தல்களைத் துறை அதிகாரிகளுக்குச் செயலர்கள் அளிக்க வேண்டும்" என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே நாடாளுமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இறுதிக் கட்ட ஆய்வு செய்வதற்காகத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சம வேலைக்கு சம ஊதியம்; முதலமைச்சர் முகமூடி அணிந்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்!