சென்னை: நாடாளுமன்ற மக்களவையில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் விவாதங்கள் தொடர்பாக, பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "பொய்யான தகவல்களை கூறிவிட்டு பின்வாங்குவது ராகுல் காந்திக்கு வாடிக்கையாகிவிட்டது, அபாண்டமான குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக கூறி வருகிறார். சுய விளம்பரத்திற்காக ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசி வருகிறார். எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி தகுதியற்றவர்.
காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து இந்துக்களை கேலி, கிண்டல் செய்து வருகிறார்கள். சிவனின் புகைப்படத்தை நாடாளுமன்றத்திற்குள் எவ்வாறு எடுத்துச் சென்றார்? மேலும், அவர் சபாநாயகரை கிண்டல் செய்து, சபையை அவமதித்துள்ளார். சட்டத்திற்கு புறம்பாக பேசினால் மைக்கை ஆஃப் தான் செய்வார்கள்" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "ராகுல் இந்துக்களை வைத்து அரசியல் செய்து வருகிறார். இந்து மக்களை புண்படுத்தும் விரோதச் செயல்களை தமிழக பாஜக கண்டிக்கிறது. இந்துக்களை கேவலப்படுத்தினால் பிரதமர் எழுந்து பேசதான் செய்வார். 2 நாடாளுமன்ற உறுப்பினர்களிலிருந்து தொடங்கிய பாஜக, எதிர்க்கட்சியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல பயமில்லை.
காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகவும், குடும்ப வளர்ச்சிக்காகவும் பல நல்ல திட்டங்களை கிடப்பில் போடப்பட்டது. மேலும், திமுகவின் ஆட்சியை இன்று ஆளும் காமராஜர் ஸ்டாலின் ஆட்சி என வாழ்த்தும் காங்கிரஸ் கட்சி, நாளை வாழும் காமராஜர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் எனவும் கூறுவார்கள்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுகவின் நிரந்தர அடிமைகளாக செயல்பட்டு வருகிறது. பிரதான எதிர்கட்சியாக இருந்த அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்தது கட்சியின் இயலாமையைக் காட்டுகிறது" என்றார். மேலும், நல்ல தலைவர் வேண்டும் என்று விஜய் பரிசளிப்பு விழாவில் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, நல்ல தலைவர்கள் வேண்டும் எனக் கூறுவது நல்லது தானே. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போன்று நல்ல தலைவர் வேண்டும் என விஜய் பேசியுள்ளார், அதனை நான் வரவேற்கிறேன்" எனக் கூறினார். தொடர்ந்து, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை என அண்ணாமலை கூறியது குறித்து கேட்கப்பட்டது.
அப்போது, "தினசரி மது அருந்தும் மதுப்பிரியர்களை அதிலிருந்து மீட்பதற்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பார். டாஸ்மாக்கை மூடு குடும்பத்திற்கு கேடு என்பது தான் பாஜகவின் கோரிக்கை.
ஆனால், உடனடியாக மூடப்படும் போது அதனால் மக்களுக்கு வேறு நோயால் பாதிக்கப்பட்ட கூடாது என்பதற்காகத்தான் படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பாஜக கூறுகிறது. நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்தால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்போம்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: அருந்ததிராய் துவங்கி அரவிந்த் கெஜ்ரிவால் வரை.. நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் காரசார பேச்சு!