சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நீட் விலக்கு சட்ட முன்வடிவிற்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வலியுறுத்தி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் வைத்தார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், ''மருத்துவத்துறையிலும், பல்வேறு சுகாதார குறியீடுகளிலும் நாட்டிற்கே முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது. பல்வேறு ஆண்டுகளாக நமது நாட்டில் பின்பற்றப்பட்ட சிறப்பான மருத்துக்கல்வியின் மாணவர் சேர்க்கை முறைதான் இந்த சாதனைகளுக்கு அடிப்படையாக அமைகிறது. முனைவர் அனந்தகிருஷ்ணன் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில் பட்டபடிப்புகளுக்கான நுழைவு தேர்வை ரத்து செய்து இந்த சாதனைகளுக்கு அடித்தளம் அமைத்தவர் கலைஞர்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், நீட் விலக்கு சட்டமுன்வடிவிற்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வலியுறுத்தி தீர்மானத்தை முன்மொழிந்து மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் ஆற்றிய உரை.#NEET pic.twitter.com/7gbUiHOpRL
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 28, 2024
பள்ளிக்கல்வி மதிப்பெண்களின் அடிப்படையில் சமூக நீதியையும், அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் சம வாய்ப்பை உறுதி செய்யக்கூடிய முன்னோடி சேர்க்கை முறையை நாம் பின்பற்றி வருகிறோம். இந்த முறையால்தான் தமிழகத்தில் அனைத்து பகுதிகளில் இருந்தும் மருத்துவர்கள் உருவாகவும், அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பான மருத்துவ சேவை வழங்கிடவும் முடிந்தது.
ஆனால், 2017 ஆம் ஆண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை ஒன்றிய அரசு கட்டாயமாக்கிய பிறகு இந்த நிலை முற்றிலுமாக மாறி ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பதென்பது எட்டா கனியாகி விட்டது. இதையெல்லாம் கருத்தில்கொண்டுதான் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே அதனை அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் எதிர்த்து வருகிறோம்.
ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கல்வி வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கும் வகையில், பள்ளிக்கல்வியை அவசியமற்றதாக மாற்றும், மாநில மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கும் உரிமையையும் மாநில அரசுகளிடம் இருந்து பிரிக்கும் வகையில் அமைந்துள்ள நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும். இந்த தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்து பள்ளிக் கல்வியிலும், மாணவர்கள் பெறும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவ சேர்க்கையை மேற்கொள்வதற்காக இந்த சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு சட்ட முன்வடிவுக்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வேண்டும்.
தொடர்ந்து பல முறைகேடுகளுக்கு வழி வகுத்து வரும் இந்த தேர்வு முறையை பல மாநிலங்கள் தற்போது எதிர்த்து வரும் நிலையில், தேசிய அளவில் நீட் தேர்வு முறை கைவிடப்படும் வகையில், தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் தேவைப்படும் திருத்தங்களை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஒரு மனதாக வலியுறுத்துகிறது'' என்றார். அதனை தொடர்ந்து நீட் விலக்கு குறித்து கூட்டணி மற்றும் கூட்டணியை சாராத கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் கருத்துக்களை முன் வைத்தனர்.
அதன் பின்னர் பேசிய முதல்வர் ஸ்டாலின், நீட் விலக்கு குறித்த தீர்மானத்துக்கு அனுமதியை வழங்கிய பேரவை தலைவருக்கும், அதனை வரவேற்று கருத்து தெரிவித்துள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக நீட் ஒழிப்புக்கான அத்தனை நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்கும் என்ற உறுதியை இந்த தீர்மானத்தின் மூலம் தெரிவித்து, இதனை ஒரு மனதாக நீங்கள் நிறைவேற்றி தர வேண்டும் என்று கேட்டமர்கிறேன்'' என்றார். அதனை தொடர்ந்து பேரவை தலைவர் '' முதலமைச்சரின் தனி தீர்மானம் பேரவையின் முடிவுக்கு விடப்படுகிறது'' எனக்கூற உறுப்பினர்கள் வாய்மொழியாக அதனை ஏற்றனர். பின்னர் நீட் விலக்கு தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியதாக பேரவை தலைவர் அறிவித்தார்.
இதையும் படிங்க: படிக்கும்போதே மறைமுக அரசியலில் ஈடுபடுங்கள்: த.வெ.க. தலைவர் விஜய் கருத்து