சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்ளுக்கான 11 ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலும் 3 ஆயிரத்து 302 மையங்களில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 534 மேல்நிலைப் பள்ளிகளில் படித்த மாணவர்கள், தனித்தேர்வர்கள் என 8 லட்சத்து 25 ஆயிரத்து 187 பேர் எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் தனித்தேர்வர்களாக 4 ஆயிரத்து 945 பேரும் எழுத அனுமதி அளிக்கப்பட்டது. அவர்களில், சிறைவாசிகள் 187 பேரும் அடங்குவர். சென்னை மாவட்டத்தில் உள்ள 591 பள்ளிகளில் படிக்கும் 65 ஆயிரத்து 852 மாணவர்கள் 240 மையங்களில் தேர்வினை எழுத அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு தயார் நிலையில் உள்ளது. அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பில், 11 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 14ம் தேதி காலை 9.30 மணிக்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடப்படுகிறது.
தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in என்ற இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்தத்தேதியை பதிவு செய்து தெரிந்துக் கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது அளித்த செல்போன் எண்களுக்கும் தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.