திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது, சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விளை நிலங்கள் பாசன வசதி பெறும் பாசன ஆற்றில் திறந்துவிடப்பட்டு வருகின்றது. இதனால் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், கால்நடைகளும் பாதிப்படையும் சூழல் உருவாகியிருப்பதாக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
காவிரி டெல்டாவில் பல ஆண்டுகளாக தண்ணீர் பிரச்னையின் காரணமாக மூன்று போகம் சாகுபடி செய்ய முடியாமல் இருந்து வந்த நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக மீண்டும் மூன்று போக சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திருவாரூர் அருகே 10க்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த, சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விளை நிலங்களுக்கு பாசனம் செய்யும் வாளவாய்க்கால் ஆற்றில், திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து வெளியேறுகின்ற கழிவுநீர், மேப்பாடி என்ற இடத்தில் வாளவாய்க்கால் ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.
இதனால் தண்டலை, நாங்கரை, சிங்களாஞ்சேரி, தியானபுரம், தேவர்கண்ட நல்லூர், சாப்பாவூர் ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களுக்கு கழிவு நீர் கலந்த ஆற்று நீர் பாயும் நிலை உள்ளது.
திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவு நீரை சுத்திகரித்து வெளியேற்றும் அமைப்புக்காக சுமார் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுத்திகரிப்பு மையமானது செயல்படவில்லை. இந்நிலையில், மருத்துவக் கழிவுகளுடன் வெளியேறும் மருத்துவமனை கழிவுநீர், இப்பாசன வாய்க்காலில் பாயும்போது அதனை பயன்படுத்தும் கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சண்முக சுந்தரம் கூறுகையில், “மருத்துவக் கல்லூரியின் கழிவு நீர் நேரடியாக இந்த வாய்க்காலில் கலக்கிறது. வாளவாய்க்கால் ஆறு நேரடியாக கடலில் கலக்கிறது. இந்த ஆற்றை நம்பி பல்லாயிரம் ஏக்கர் உள்ளது. சுத்தமாக இருந்த ஆறு மருத்துவக் கல்லூரியால் கழிவு நீர் ஆறாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறப்பை விவசாயிகள் எதிர்பார்த்திருக்கும் நிலையில், மேட்டூர் அணை திறந்து தண்ணீர் வந்தாலும் தண்ணீருக்கு முன்பாக கழிவு நீர் திறந்துவிடப்பட்டு ஆறுபோல ஓடுகிறது.
மேலும், ஆற்றில் கழிவு நீர் தேங்கி ஆற்றுடன் கலந்து செல்கிறது. உடனடியாக வாளவாய்க்கால் ஆற்றை சுத்தம் செய்வதோடு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவுநீர், பாசன வாய்க்காலில் கலக்காதவாறு செய்திட வேண்டும். இந்த கழிவுநீர் வேறு யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு சுத்திகரிப்பு மையத்தையும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மக்களவைத் தேர்தல் 2024: திமுகவுக்கு சிக்கலைக் கொடுக்கும் தொகுதிகள்! முடிவு என்ன வரும்? - Lok Sabha Election 2024