திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் இந்த வருடம் 40,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு மே மாதம் மேட்டூர் அணையில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்ட காரணத்தினால், ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்காத காரணத்தினால் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது. குறிப்பாக, திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட சேந்தனாங்குடி, பூந்தாழங்குடி, கீழ மணலி மற்றும் திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட கல்யாண மகாதேவி, கூத்தங்குடி, அன்னுக்குடி, கருப்பூர், வடகரை, தென்கரை ஆகிய பகுதிகளில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
முக்கியமாக, சேந்தனாங்குடி பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது சேந்தனாங்குடி பகுதியில் குறுவை நெற்பயிர் பயிரிடப்பட்டு 60 நாட்கள் ஆகியுள்ளது. இந்நிலையில், அங்கிருக்கும் 50 ஏக்கருக்கும் மேல் பம்பு செட் மூலம் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்து வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய விவசாயி மூர்த்தி, “கடந்த 15 நாட்களாக நீர்நிலைகள் வறண்டு போய் காணப்படுவதாலும், மழைப்பொழிவு இல்லாத காரணத்தினாலும், நிலத்தடி நீர் குறைந்துள்ளதால் 200 அடி ஆழத்திற்கு போடப்பட்ட பம்பு செட் வழியாக கூட நீர் குறைவாக வருகிறது எனக் கூறுகின்றனர்.
மேலும், உப்பு தண்ணீராக வருவதால் குறுவை நெற்பயிர்கள் கருகி நாசமாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே, தமிழக அரசு உடனடியாக மேட்டூர் அணையில் இருந்து 10 நாட்களுக்குள் தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே கருகி வரும் நெற்பயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, ஏற்கனவே பருத்தி மற்றும் எள் பயிர்கள் கனமழையால் பாதிக்கப்பட்டு தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது குறுவை சாகுபடிக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30,000 ரூபாய் வரை செலவு செய்தும், நீர்நிலைகள் வறண்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, நிலத்தடியிலிருந்து நீர் உப்பாக வருவதால் நெற்பயிர்கள் பழுப்பு நிறமாக மாறி கருகி வரும் நிலை விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திகிறது” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: கூடங்குளம் அணுமின் நிலைய பகுதியில் சுற்றி திரிந்த ரஷ்யர்கள்; காவல் ஆய்வாளர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!