திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு காட்டேரி சமத்துவபுரத்தில் அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் மூலம் இப்பள்ளியில் தினமும் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.
அதன்படி, இப்பள்ளியில் இன்று (ஜன. 29) காலை சிற்றுண்டியாக மாணவர்களுக்கு சேமியா உப்புமா கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் உப்புமாவை சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுது உப்புமா இருந்த பாத்திரத்தில் பல்லி ஒன்று இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.
அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் முன்னெச்சரிக்கையாக உப்புமா சாப்பிட்ட 13 மாணவர்களை ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையில் மாணவர்கள் நலமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில், ஹரிஷ் என்ற மாணவரின் தந்தை, தன்னுடைய மகனை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பார்க்கிறேன் என்று கூறி அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஆரணி அரசு மருத்துவமனையில் பரபரப்பான சூழல் நிலவியது. அரசு பள்ளியில் வழங்கப்படும் காலை சிற்றுண்டியில் பல்லி இறந்து கிடந்ததாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: செங்கல்பட்டு, திண்டிவனம் வழி பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம்! எப்போதிலிருந்து தெரியுமா?