திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் சிறு குறு தொழில் முனைவோருக்கு மாவட்ட தொழில் மையம் மூலம் மத்திய மாநில அரசுகளின் பல்வேறு திட்டத்தில் தொழில் தொடங்க மானியத்துடன் வங்கி கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் ஈக்காடு பகுதியைச் சேர்ந்த குமாரசாமி(47) அப்பகுதியில் புத்தக கடை நடத்தி வருகிறார்.
இவர் புத்தக கடையை விரிவுப்படுத்த கடந்த 2022ஆம் ஆண்டு மாவட்ட தொழில் மையத்தை அணுகி ரூ.5 லட்சம் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால், ரூ.2 லட்சத்தை மத்திய அரசின் மானியத் தொகையுடன் கடன் உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெற்றுள்ளார்.
இதனையடுத்து, மத்திய அரசு திட்டத்தில் வழங்கப்படும் மானியம் ரூ.50 ஆயிரம் பெறுவதற்குக் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மாவட்ட தொழில் மையத்தை அணுகியும் இதுவரை அதிகாரிகள் வழங்காமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. மேலும், மத்திய அரசின் மானிய பணம் வேண்டுமென்றால், லஞ்சம் கொடுக்க வேண்டும் என மாவட்ட தொழில் மைய உதவியாளர் சிவக்குமார் கேட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து குமாரசாமி திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வழிகாட்டுதலின் பேரில், புகார்தாரர் குமாரசாமி மாவட்ட தொழில் மைய உதவியாளர் சிவக்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.2,500-ஐ கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் ராமச்சந்திர மூர்த்தி, காவல் ஆய்வாளர் தமிழ் அரசி தலைமையிலான 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், உதவியாளர் சிவக்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதையும் படிங்க: வாரிசு சான்றிதழ் வழங்க 1000 ரூபாய் லஞ்சம் பெற்ற பெண் வருவாய் ஆய்வாளர் கைது!