திருப்பூர்: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று(பிப்.19) அவரது முதல் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்தார். 'தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கி' என்ற தலைப்பில் இந்தாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதனால் குறு, சிறு தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரிடையே பட்ஜெட்டுக்கான எதிர்பார்ப்பு அதிகளவிலிருந்தது.
பல்வேறு நலத்திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தாண்டுக்கான பட்ஜெட் குறு சிறு தொழிலாளர்கள், பின்னலாடை ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளதாகத் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முத்து ரத்தினம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கடந்த ஆறு மாத காலமாக தொழில்துறையினர் மிகவும் நலிவடைந்து இருக்கக்கூடிய சூழ்நிலையில் தான் இருந்து வருகின்றனர். பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் அரசு அதற்கு இதுவரையிலும் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருந்து வந்தது. எனினும் பட்ஜெட்டில் சலுகை தொடர்பான புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்த்து இருந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள பட்ஜெட் தொழில்துறையினருக்கு பெரும் ஏமாற்றம் அளிப்பதாகவே அமைந்திருக்கின்றது.
மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும், பீக் ஹவர்ஸ் (PEAK HOURS) முழுமையாக நீக்கப்பட வேண்டும், நிலை கட்டடத்தை பழையபடி கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிலைப்படுத்திக் கடந்த ஆறு மாதக் காலமாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தோம். தமிழ்நாட்டில் மொத்தம் 13லட்சம் குறு சிறு நடுத்தர தொழிலாளர்கள் உள்ளனர். கிட்டத்திட்ட 1கோடி பேருக்கு இதன்மூலம் வேலைவாய்ப்பு வழங்கி வருகிறோம்.
எங்கள் அனைவரின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்குவது போல் அமைந்துள்ளது இந்த பட்ஜெட். இந்த பட்ஜெட் முழுக்க முழுக்க எங்களை வஞ்சிக்கின்ற வகையிலே அமைந்துள்ளது. குறு, சிறு, நடுத்தர தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத வகையில் அமைந்துள்ள இந்தாண்டு பட்ஜெட்டில் புதிய தொழில் துவங்குவதற்கான அறிவிப்புகள் மட்டுமே இருக்கின்றது. முன்னதாக தொழில் செய்யும் நபர்களுக்கு ஊக்கமளிக்கக் கூடிய வகையில் இந்த பட்ஜெட் அமையவில்லை. பட்ஜெட் எங்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே அளித்துள்ளது" என்று திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முத்து ரத்தினம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: புதிய கூட்டுக்குடிநீர் திட்டங்கள்: காவிரி முதல் வைகை வரை பட்ஜெட்டில் அறிவிப்புகள்!