திருப்பத்தூர்: கர்நாடகா மாநிலம் சிக்பலாபுரம் மாவட்டம் சிந்தாமணி தாலுகா வெங்கடகிரி கோட்டை பகுதியை சேர்ந்தவர் நரசிம்மமூர்த்தி. இவரது மகன் சதீஷ் (வயது 37). இவர் 16 லாரிகளை வைத்து சிமெண்டு பாரம் ஏற்றி அனுப்பும் தொழில் செய்து வருகிறார்.
இவருக்கு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்ய பணம் தேவைப்பட்டுள்ளது. இதற்காக வீட்டை அடமானம் வைத்து கடன் பெற பல இடங்களில் பணம் கேட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அவருடைய லாரியை ஓட்டும் நீலகண்டனிடம் லோன் கொடுக்கும் நபர் உங்களுக்கு தெரியுமா என கேட்டுள்ளார்.
அதன் காரணமாக நீலகண்டன் சென்னையை சேர்ந்த தேவராஜ் என்பவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அப்போது தேவராஜிடம் லோன் குறித்து கேட்ட போது ரூ.4 லட்சம் கமிஷன் மற்றும் வீட்டு ஆவணங்கள் கொண்டு வந்தால் ரூ.2 கோடி கடன் பெற்று தருவதாக கூறியுள்ளார்.
அதற்கு சதீஷ் சம்மதம் தெரிவித்து பணம் மற்றும் வீட்டு ஆவணங்களை எடுத்துகொண்டு, நண்பர்கள் சிலருடன் சென்னை நோக்கி கடந்த 19ஆம் தேதி காரில் சென்றுள்ளார். அதேபோல் தேவராஜ் சென்னையிலிருந்து வந்து கொண்டிருப்பதாகவும் பணம் எடுத்துக் கொண்டு வந்து விட்டேன் நீங்க நாட்டறம்பள்ளி, நெக்குந்தி சோதனைச்சாவடி அருகே வருமாறு கூறியுள்ளார்.
அங்கு சென்ற போது தேவராஜ் தான் கொண்டு வந்த கார் டிக்கியில் ரூ.2 கோடி போலி பணத்தை காட்டியுள்ளார். அதன் பின்னர் தேவராஜ் உடைய காரில் சதீஷை அழைத்துக் கொண்டு பணத்தை இங்க எண்ண வேண்டாம் ஏதாவது பிரச்சினை வரும் ஏதாவது மறைவான இடத்தில் பணத்தை எண்ணிக்கொள்ளலாம் எனக் கூறி அங்கிருந்து காரில் நாட்டறம்பள்ளி அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது பையனப்பள்ளி கூட்ரோடு அருகே ஒரு காரில் 2 பேர் போலீஸ் சீருடையிலும், 3 பேர் டிப் டாப் உடையிலும் நின்றுள்ளனர். மேலும் அவர்கள் தேவராஜ் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்து பணம் குறித்து விசாரணை செய்வது போன்று நாடகமாடி உள்ளனர்.
இதையும் படிங்க: திருமண மொய்ப்பணத்தை ஆதரவற்றோர் அறக்கட்டளைக்கு அளித்த தேனி புதுமண தம்பதி!
பின்னர் அவர்கள் தேவராஜ் மற்றும் காரில் வந்த சதீஷ் என அனைவரிடமும் எதுவாக இருந்தாலும் காவல் நிலையம் வாருங்கள். அங்கு பேசிக்கொள்ளலாம் எனக் கூறி சதீஷ் கொண்டு சென்ற 4 லட்சம் பணத்தை அங்கிருந்து போலி போலிசார் எடுத்து சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சதீஷ் பர்கூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று, போலீஸ் உடையில் வந்து சோதனை செய்து பணத்துடன் சென்றது குறித்து தெரிவித்துள்ளார்.
அப்போது அங்கு வந்து சோதனை செய்தது போலீசார் இல்லை என்பதும். தாங்கள் ஏமாற்றப்பட்டதும் தெரியவந்துள்ளது. பின்னர் இது குறித்து சம்பவம் நடைபெற்ற இடமான நாட்றம்பள்ளி காவல் நிலைய போலீசாரிடம் சென்று புகார் கொடுத்துள்ளார். இதன் காரணமாக இது குறித்து இரண்டு தனி படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று தேவராஜ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ராஜேஷ்பாபு மற்றும் கோபி ராஜா ஆகியோரை நாட்றம்பள்ளி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து பண மோசடிக்கு பயன்படுத்திய கார் மற்றும் 3 லட்சத்தை 75 ஆயிரம் ரூபாயை கைப்பற்றினர். இந்நிலையில் போலீசார் போல் சீருடைகளில் வந்து மோசடியில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.