திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த எல்.மாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி துர்காதேவி (25). இருவரும் காதலித்து கலப்பு திருமணம் செய்து ஒரு வருடம் ஆன நிலையில், துர்கா தேவி கடந்த ஞாயிற்றுகிழமை, (10.11.2024) முதல் பிரசவத்திற்காக ஆம்பூர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்போது துர்காதேவியிற்கு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் துர்காதேவியிற்கு கர்ப்பபையில் இருந்து அதிக அளவு ரத்தபோக்கு ஏற்பட்டுள்ளதால், துர்காதேவியை மருத்துவர்கள் திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முடியாமல், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி, அங்கும் சிகிச்சை அளிக்க முடியாமல், இறுதியாக மருத்துவர்கள் துர்காதேவியை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், கடந்த புதன்கிழமை (13.11.2024) துர்காதேவி உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து துர்காதேவியின் உடல் நேற்று (14.11.2024) எல்.மாங்குப்பம் பகுதியிற்கு கொண்டு வரப்பட்டது.
இதற்கிடையே துர்காதேவியிற்கு பிறந்த குழந்தை தர்மபுரி அரசு மருத்துவமனையில் மிக மோசமான நிலையில் இங்குபேட்டரில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (14.11.2024) மாலை அந்த பெண் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது. அதனை தொடர்ந்து தாய் மற்றும் சேயின் உடலை நேற்று இரவு அவரது உறவினர்கள், எல்.மாங்குப்பம் மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.
இந்நிலையில் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் துர்கா தேவி அனுமதிக்கப்பட்ட போது, அவருக்கு முறையான சிகிச்சை அளிக்காதினாலேயே துர்காதேவி உயிரிந்ததாக கூறி மருத்துவர் சியாமளா மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி துர்காதேவியின் உறவினர்கள் ஆம்பூர் - பேர்ணாம்பட் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதையும் படிங்க: “சிறு பிள்ளைகள் கர்ப்பிணி ஆவதற்கு இதுதான் காரணம்!”- சீமான் பரபரப்பு பேட்டி
பின் சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் தலைமையிலான காவல்துறையினர், ஆம்பூர் வட்டாச்சியர் ரேவதி தலைமையிலான வருவாய்துறையினர், மற்றும் திருப்பத்தூர் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குநர் கண்ணகி ஆகியோர் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு, இதுகுறித்து புகார் அளித்தால், துர்காதேவியிற்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மேலும் தனது மனைவி மற்றும் குழந்தை இறப்பதற்கு காரணமான ஆம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் சியாமளா மற்றும் இரண்டு செவிலியர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து, உரிய இழப்பீடு வழங்க கோரி துர்காதேவியின் கணவர் விஜய் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
இந்நிலையில் துர்காதேவியிற்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் சியாமளாவை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பணியிடம் மாற்றம் செய்து திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் கண்ணகி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.