திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் வசிப்பவர் வேல்முருகன். இவர் அப்பகுதியில் சிறிய டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது மகன் பேச்சி (26), கடந்த வாரம் வெளியான யுபிஎஸ்சி தேர்வில் 576வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
1 முதல் 12ஆம் வகுப்பு வரை கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளியிலும், தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் இன்ஜினியர் படிப்பை முடித்த இவர், யுபிஎஸ்சி தேர்வில் சாதனை படைப்பதையே தனது லட்சியமாகக் கொண்டு படித்து வந்துள்ளார்.
கடந்த நான்கு முறை தேர்வெழுதி வெற்றி கிடைக்காத நிலையில், இவர் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று, நெல்லை மாவட்டக் கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக தற்போது வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், வேலையின் நடுவே ஐஏஎஸ் தேர்வுக்கு பயின்று வந்த பேச்சி, தனது விடா முயற்சியால் கடந்தாண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது தாயார் லட்சுமி பீடி சுற்றும் தொழிலாளியாகவும், சகோதரர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்திலும் வேலை பார்த்து வருகிறார். பிழைப்புக்காக டீக்கடை மட்டுமே வைத்து நடத்தி வரும் தந்தை வேல்முருகன், மகனின் கலெக்டர் கனவை நிறைவேற்ற வேண்டும் என தனது சொந்த வீட்டை விற்று படிக்க வைத்துள்ளார். தற்போது தேர்வில் மகன் வெற்றி பெற்றது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த அவர், தனது கனவு நிறைவேறியதாக ஆனந்தக் கண்ணீருடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விரைவில் தூத்துக்குடி டூ பாலக்காடு ரயில் சேவை! - மதுரை கோட்டம் ரயில்வே அதிகாரி தகவல் - Express Trains