திருநெல்வேலி: நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜான்சி ராணி ஆகியோர், நேற்று (மார்ச் 25) தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்நிலையில், இன்று நாம் தமிழர் கட்சி சார்பில், நெல்லை தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சத்யா, தனது ஆதரவாளர்களுடன் வந்து தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கார்த்திகேயனிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
வேட்பு மனுவில் கையெழுத்திட்ட பின், தேர்தல் நடத்தும் அலுவலர் உறுதிமொழி படிவத்தை வாசிக்குமாறு கூறியதையடுத்து, அவர் உறுதிமொழி படிவத்தை வாசிக்கத் தொடங்கினார். அப்போது, காலியாக உள்ள இடத்தை நிரப்பும் வகையில் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறி, அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி நடப்பேன் என்றும் கூறிய வேட்பாளர் சத்யா, முடிவில் “என் தாயின் மீதும், அன்னைத் தமிழின் மீதும், மேதகு தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் மீதும் உறுதி கூறுகிறேன்” என உறுதிமொழியை வாசித்து முடித்தார்.
ஆனால், “உளமாற உறுதி கூறுகிறேன்” என கூறி முடித்தால் தான், உறுதிமொழி படிவம் செல்லும் என தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியர் சத்யாவிடம் அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து சத்யா, மீண்டும் படிவத்தை வாங்கி “உளமாற உறுதி கூறுகிறேன்” எனக் கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். இதையடுத்து, ஆட்சியர் கார்த்திகேயன், சத்யாவின் வேட்புமனுவை பெற்றுக் கொண்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.