திருநெல்வேலி: தமிழகம் முழுவதும் அண்மைக்காலமாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், நெல்லை மாநகராட்சி 7வது வார்டுக்கு உட்பட்ட மணக்காவலம் பிள்ளை நகர் பகுதியில் காமராஜர் தெரு, ஆசாத் தெருக்களில் 50க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித் திரிந்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணக்காவலம் பிள்ளை நகர் பகுதியில் வசிக்கும் கிளாரிஸ் என்பவர், தனது வீட்டு வாசலில் கட்டி வைத்திருந்த ஐந்து ஆட்டுக்குட்டிகளை நாய் கடித்ததில் உயிரிழந்தது. அதேபோல, கிளாரிஸின் பேரன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது, நாய் கடித்ததில் பலத்த காயம் அடைந்துள்ளார்.
மேலும், வீட்டில் வளர்க்க ஆசையாய் முப்பதாயிரம் வரை விலை கொடுத்து வாங்கிய வெளிநாட்டு பூனைகளையும் கடித்துக் கொன்று விட்டதாக கூறப்படுகிறது. ஆட்டை கடித்து, ஆசையாய் வளர்த்த பூனையையும் கடித்துக் கொன்ற தெரு நாய்கள், இப்போது தெருவில் விளையாடும் குழந்தைகளையும் கடிக்கத் தொடங்கியுள்ளது.
தெரு நாய்களால் நாள்தோறும் 5 பேராவது நாய்கடிக்கு ஆளாகின்றனர். இதனால் சாலையில் நடக்கவே மிகுந்த அச்சமாக உள்ளது என்கின்றனர் அப்பகுதி மக்கள். மேலும், வீடுகளுக்கு பால் ஊற்ற வந்த பெண்மணியை கடித்து விட்டது, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பேரனையும் கடித்து விட்டது என அப்பகுதியில் வசிக்கும் ஒவ்வொரு மக்களும் நாய்க்கடியினால் சந்தித்த பிரச்னைகளை கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.
மேலும், “தெருவில் நாய்கள் சுதந்திரமாக திரிகின்றன. ஆனால், மக்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு செல்ல முடியவில்லை. வீட்டில் ஆசையாய் பூனைக்குட்டிகளையோ, ஆட்டுக்குட்டிகளை வளர்க்க முடியவில்லை, நாய்க்கடி தொல்லை குறித்து தொடர்ச்சியாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தோம். ஆனால், இதுவரை ஏதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அருகில் இருக்கும் கவுன்சிலரிடம் தெரிவித்தோம்.
அப்போதும் தெரு நாய்களை அப்புறப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வளர்ப்பு பிராணிகள், குழந்தைகள் என தொடர்ச்சியாக தெரு நாய்களால் கடிபட்டு பாதிக்கப்பட்டு வரும் எங்கள் பகுதி மக்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்த கட்டமாக மக்களை ஒன்று திரட்டி போராட்டத்தை நடத்த உள்ளோம்” என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்