திருநெல்வேலி: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் தனசிங்-கின் உடல் அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் கரைசுத்துப் புதூரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று மதியம் 12.00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காலை சுமார் 9.20 மணியளவில் ஜெயக்குமாரின் உடல் பிரதே பரிசோதனைக்குப் பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, ஜெயக்குமாரின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கரைசுத்துப் புதூருக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட ஜெயக்குமாரின் பிரேத பரிசோதனை முடிவுகள் விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமாரை காணவில்லை என திடீரென அவரது மகன் கருத்தையா ஜாப்ரின் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து நேற்று (மே 4) ஜெயக்குமாரின் சொந்த ஊரான திசையன்விளை அடுத்த கரைசுத்து புதூரில் உள்ள அவரது தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக ஜெயக்குமார் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மரணம் தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், இச்சம்பவம் தொடர்பாக ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக, ஜெயக்குமார் உடலை மீட்டபோது உடலுக்கு கீழ் பலகை வைத்து மின் வயர் மற்றும் இரும்பு கம்பியால் அவரது உடல் கட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மர்ம நபர்கள் அவரை பலகையில் கட்டி வைத்து தீ வைத்து எரித்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், ஜெயக்குமார் எழுதி வைத்திருந்ததாக சமூக வலைதளங்களில் கடிதம் ஒன்று வரலாகப் பரவியது. மேலும் அந்த கடிதத்தில் அவர், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மற்றும் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு உட்பட ஆறு பேர் பெயரைக் குறிப்பிட்டு அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக எழுதி இருந்தார் என்று கூறப்படுகிறதது.
ஆனால், இது தொடர்பாக பேட்டியளித்த ரூபி மனோகரன் ஜெயக்குமாருக்கும் எனக்கும் மிகுந்த நட்பு உள்ளது. அவருக்கும் எனக்கும் எந்த கொடுக்கல் வாங்கலும் இல்லை என தெரிவித்திருந்தார். இதற்கிடையில், 'ஜெயக்குமார் உயிரிழந்த விவகாரத்தில் எந்த சமரசமும் கிடையாது' என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இன்று (மே 5) மதியம் 12.00 மணிக்கு கரைச்சுத்து புதூர் கிராமத்தில் ஜெயக்குமார் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இதன் காரணமாக, பாதுகாப்பு பணிகளுக்காக ஏராளமான போலீசார் கரைச்சுத்து புதூர் கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், மறைந்த ஜெயக்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ரயில் மூலம் நெல்லை வந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ஜெயக்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதன் பின்னர் ஜெயக்குமாரின் சொந்த ஊரான கரைசுத்துப் புதூரில் நடக்கும் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
அதேபோல், தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழுத்தலைவர் ராஜேஷ்குமார், கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் உள்ளிட்ட பலர் திருநெல்வேலி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த ஜெயக்குமார் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனை அடுத்து, அவரது உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜெயக்குமாரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மதியம் 12.00 மணியளவில் ஜெயக்குமாரின் உடல் அவரது சொந்த ஊரான கரைசுத்து புதூரில் நல்லடக்கம் செய்யப்பட்ட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ''காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உயிரிழப்பில் எந்த ஒரு சமாதானமும் கிடையாது''