திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ஆயிரம் கோடியில் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் ஒன்றான, அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை, ஈரோட்டைச் சேர்ந்த அன்னை இன்ப்ரா டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் செய்து வருகிறது.
இந்நிலையில், அன்னை இன்ப்ரா டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அசோக்குமார், மேலாளர் சக்திவேல் மற்றும் ஊழியர்கள் ஆனந்த்பாபு, முகமது உனீஸ் ஆகியோர் நேற்று (பிப்.5) மாலை, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவைச் சந்தித்து, அவருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.
அவர்கள் லஞ்சம் கொடுக்க வந்ததை அறிந்த ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், அவர்கள் முன்னிலையில், மாநகர காவல் ஆணையர் மூர்த்தியை தொடர்பு கொண்டு, மாநகராட்சி அலுவலகத்திற்கு லஞ்சம் கொடுக்க வந்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். காவல் துறையினர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வருவதற்கு முன்பாக, தனியார் நிறுவன இயக்குனர் அசோக்குமார் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகத்திற்கு காவல் ஆணையாளர் மூர்த்தி உத்தரவின்படி வந்த திருநெல்வேலி சந்திப்பு போலீசார், மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நின்று கொண்டிருந்த அந்நிறுவன ஊழியர்களான சக்திவேல், ஆனந்த்பாபு, முகமது உனீஸ் ஆகிய மூன்று பேர் மீது 7A 12 ஊழல் தடுப்பு (7A 12 Prevention of corruption) என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகத்திற்கு எதற்காக சென்றனர், கையூட்டு கொடுக்கப்பட்டது உண்மையா என்று போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் தனியார் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் அசோக்குமார் என்பவரை போலீசார் தேடி வந்தனர். தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் அலுவலக வளாகம் மற்றும் ஆணையாளர் அறையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வுக்கு உட்படுத்தி, விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், முதற்கட்ட விசாரணையில், அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பணி முழுமை அடையாத இடங்களில் மீண்டும் டெண்டர் அறிவிக்கப்பட்டு, பணிகள் தொடர மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், மேயர் சரவணன் மற்றும் ஆளும் கட்சி கவுன்சிலர் இடையே ஏற்படும் மோதல் காரணமாக, தீர்மானங்கள் நிறைவேற்ற முடியாமல் மாநகராட்சி மன்றக் கூட்டம் தோல்வியில் முடிந்துள்ளது.
இதனால், ஒப்பந்த நிறுவனத்தின் இயக்குனர் அசோக் குமார், ஆணையாளரை தனியாகச் சந்தித்து மேற்கண்ட பணிக்கான டெண்டரை, தனக்கு சாதகமாக அமைத்து தர லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. மேலும், தப்பி ஓடிய அசோக்குமார், தற்போது சென்னையில் இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே, அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் சென்னை விரைந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து, இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான உதவி ஆணையர் ராஜேஸ்வரனை, ஈடிவி பாரத் பிரத்யேகமாக தொடர்பு கொண்ட நிலையில், “ஆணையரைச் சந்திக்க சென்றபோது கையில் பேக் வைத்துள்ளனர். அவர்கள், ஆணையருக்கு லஞ்சப் பணம் கொடுக்க முயன்றதாக ஆணையர் காவல்துறையிடம் புகார் அளித்தார். அதன் பெயரில் நாங்கள் சென்றபோது, அசோக் குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இந்த வழக்கில், மூன்று பேரை கைது செய்துள்ளோம். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். தப்பி ஓடிய அசோக்குமாரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் பணிகள் தொடர்பான விவகாரத்திற்கு இவர்கள் லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரித்து வருகிறோம். லஞ்சம் தொடர்பான வழக்கு என்பதால், தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் இந்த வழக்கை மாற்றுவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருமணம் செய்யாமல் குழந்தை பெற அனுமதி கேட்டு வழக்கு: மேற்கத்திய கலாச்சாரம் போல் இல்லை; திருமணம் அவசியம் என நீதிமன்றம் அறிவுரை!