திருநெல்வேலி: நெல்லையில் அமைந்துள்ள நெல்லையப்பர் திருக்கோயில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவாலயமாகும். இங்கு பல்வேறு விழாக்கள் ஆண்டுதோறும் நடைபெற்று வந்தாலும், ஆனி மாதம் நடைபெறும் ஆனித்தேரோட்ட திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆனித்தேரோட்ட திருவிழாவில் நெல்லை மட்டுமல்லாமல், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பங்குபெறுவார்கள்.
இந்நிலையில், நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்டத்தை முன்னிட்டு வரும் ஜூன் 21ஆம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திருநெல்வேலி நகரில் அமைந்துள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில் தேர்த்திருவிழா (21.06.2024) வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகள், அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின், பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும், மேற்படி 21.06.2024 உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது எனவும், மேலும் இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்துசார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டு அரசு காப்புகள் தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காகச் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில், 29.06.2024 அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது” என மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 23 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த பாலாலயம்.. களைகட்டிய ஸ்ரீ அபிராமி சமேத தான்தோன்றீஸ்வரர் கோயில்! - Thirukkadaiyur Amman Temple