சென்னை: கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி இரவு தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் 4 கோடி ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்தனர். மேலும் இப்பணத்தைக் கொண்டு சென்ற நவின், சதீஷ், பெருமாள் ஆகிய மூவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், இது திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் எனவும், அவரது ஹோட்டலில் இருந்து தேர்தல் செலவுக்காகக் கொண்டு செல்லப்படுவதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.
மேலும், இந்தப் பணம் சென்னையில் பல்வேறு பகுதிகளிலிருந்து கைமாற்றிக் கொண்டு செல்லப்படுவதாகவும் வாக்குமூலம் அளித்தனர். அதன் அடிப்படையில் இந்த வழக்கின் தீவிர தன்மையைக் கருதி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டார். இந்த நிலையில், இந்த வழக்கு குறித்தான ஆவணங்களைப் பெற்ற சிபிசிஐடி போலீசார் பணம் கொண்டு சென்றதாகக் கைது செய்யப்பட்ட மூவர் உட்பட இதுவரை 15 நபர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், அவர்கள் அளித்துள்ள வாக்குமூலங்களை வீடியோ பதிவாகச் செய்து வைத்துள்ளனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய நயினார் நாகேந்திரனுக்கான ரயிலில் செல்லக்கூடிய எமர்ஜென்சி கோட்டா டிக்கெட்டில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் மூவரும் பணத்தைக் கொண்டு சென்றது தெரிய வந்துள்ளது.
மேலும், இவர்கள் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான சட்டமன்ற உறுப்பினர் ஐடி கார்டை பயன்படுத்தி எமர்ஜென்சி கோட்டாவில் பணித்திருப்பதும் அந்த ஐடி கார்டை சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 15 நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அடுத்த கட்டமாக நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரியுடன் தாக்கிய விவகாரம்; பின்னணி பாடகர் மீது வழக்குப்பதிவு! - Case Registered Against Velmurugan