தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 110 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். ஐந்து ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 20 வருடமாக 49 வயதான தலைமை ஆசிரியை பணிபுரிந்து வருகிறார்.
பள்ளியின் செயலாளராக ராஜன் பதவி வகித்து வரும் நிலையில், நேற்று தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டது. அப்போது, இப்பள்ளியும் திறக்கப்பட்ட நிலையில், செயலாளர் ராஜன் தலைமை ஆசிரியரை பள்ளிக்கு வெளியே நிறுத்தி கிரில் கேட்டிற்கு பூட்டு போட்டுள்ளார். இதனையடுத்து, தலைமையாசிரியர் சுமார் இரண்டு மணி நேரமாக வெளியிலே காத்திருந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
அப்போது அவருக்கு அப்பகுதி மக்கள் தண்ணீர் கொடுத்து உதவியுள்ளனர். இந்தச் சம்பவம் செய்தியாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளியின் செயலாளர் ராஜன் தலைமை ஆசிரியர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து பள்ளியின் செயலாளர் ராஜன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், கடந்த 1914ஆம் ஆண்டு எனது தாத்தாவால் துவங்கப்பட்டது இந்த நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியில் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியை மீது பாலியல் புகார்கள் வந்துள்ளது. முன்னாள் பள்ளியில் படித்த மாணவர்கள் மீது பாலியல் உறவில் இருந்துள்ளார்.
இது அப்பகுதி மக்கள் அனைவருக்கும் தெரிய வரவே, பள்ளியின் பெயர் கெட்டு விடக்கூடாது என்ற காரணத்தினால் இது சம்பந்தமாக தலைமை ஆசிரியரிடம் கடந்த மார்ச் 22ஆம் தேதி விசாரித்தேன். அவரிடம் கடிதம் கொடுத்து விளக்கம் கேட்டிருந்தேன். அதற்கு அவர் என் மீது அவதூறு பரப்பும் விதமாக என் மீது குற்றச்சாட்டு வைத்து வருகிறார்.
அவர் ஒரு பெண் என்பதால், அவர் மீது உள்ள பாலியல் புகார் என்னால் மேற்கொண்டு எங்கும் கொண்டு செல்ல முடியவில்லை. மேலும், நேற்று கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டது. வழக்கமாக பள்ளியின் முன் பகுதியில் வாகன நெரிசல் ஏற்படும் காரணத்தினால், பின் வாசல் வழியாக வருமாறு ஆசிரியர்கள், மாணவர்களை கூறினோம்.
ஆனால், தலைமையாசிரியர் வேணுமென்றே தகராறு செய்ய வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காகவே முன்வாசல் வழியாகத்தான் வருவேன் என்று கூச்சலிட்டார். இது குறித்தான உண்மைச் சம்பவத்தை தெரியப்படுத்தி பள்ளியின் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளிக்க வந்ததாக கூறினார்.