தூத்துக்குடி: முருகனின் அறுபடை வீடுகளுள் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா வரும் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
இது குறித்து கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 24ஆம் தேதி ஆவணி திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு, அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5 மணிக்கு திருவிழா கொடியேற்றப்படுகிறது.
மாலை வேளையில் அப்பர் சுவாமிகள் கோயிலில் இருந்து தங்க சப்பரத்தில் புறப்பட்டு திருவீதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சி, இரவில் ஸ்ரீ பெலி நாயகர் அஸ்திர தேவருடன் பல்லாக்கில் 9 சந்ததிகளின் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியாக 28ஆம் தேதி 5ஆம் திருவிழாவை முன்னிட்டு மேல கோயிலில் இரவு 7:30 மணிக்கு குடைவரை வாயில் தீபாராதனை நடைபெற்று சுவாமியும், அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
ஆகஸ்ட் 29ஆம் தேதி காலையில் கோரதமும், இரவில் வெள்ளி ரதமும் வீதி உலா வருதல், 30ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு சண்முக பெருமானின் உருகு சட்ட சேவை நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து 8:45 மணிக்கு சுவாமி சண்முக பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில் தரிசனத்துடன் பிள்ளையன் கட்டளை மண்டபத்தை சப்பரம் சேருகிறது. அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று மாலை 4:30 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்.
ஆகஸ்ட் 31ஆம் தேதி காலை 5 மணிக்கு பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி சுவாமி எழுந்தருளி திருவீதி உலா வலம் வந்து மேலகோயில் சேர்கிறார். 8வது திருவிழா மண்டகப்படி மண்டபத்தில் வைத்து சுவாமிகள் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்று காலை 10:30 மணிக்கு பச்சை கடைசல் சப்பரத்தில், சாமி பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து கோயிலை வந்தடைகிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செப்டம்பர் 2ஆம் தேதி காலை 6:30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. மேலும், ஆவணி திருவிழாவை முன்னிட்டு வரும் 24இல் கொடியேற்றம் மற்றும் ஆகஸ்ட் 30இல் 7ம் திருவிழா அன்று அதிகாலை 1 மணிக்கும், ஆகஸ்ட் 25ஆம் தேதி 2ம் திருவிழா அன்று அதிகாலை 3 மணிக்கும், மற்ற நாட்களில் அதிகாலை 4 மணிக்கும் கோயில் நடை திறக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் இரண்டு பறவைகள் சரணாலயம் ராம்சார் தளங்களாக அறிவிப்பு! - Two More Ramsar Sites In Tamil Nadu