தருமபுரி: நல்லம்பள்ளி தாலுகா பாலவாடி அடுத்த கானாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சை(70). இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி(65), மணி(63) ஆகிய மூவரும் தங்கள் கிராமத்தில் இருந்து பாலக்கோடு அருகே உள்ள கேசர்குளி அணை பகுதியில் உள்ள உறவினரின் ஈமச்சடங்கு நிகழ்ச்சிக்கு சென்றனர்.
பின் அங்கிருந்து மூவரும் ஒரே பைக்கில் தருமபுரி ஓசூர் நெடுஞ்சாலையில் பொறத்தூர் அருகே நேற்று மதியம் நெடுஞ்சாலையில் எதிர் புறமாக வந்து கொண்டிருந்தனர். அப்போது தருமபுரியில் இருந்து ஓசூர் நோக்கி ஏறுபள்ளியைச் சேர்ந்த புஷ்பாகரன்(31) என்பவர் ஓட்டி சென்ற கார், எதிரே பைக்கில் வந்து கொண்டிருந்த பச்சை உள்ளிட்ட மூன்று பேர் மீதும் மோதியதில் பச்சை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மணி மற்றும் முனுசாமி ஆகிய இருவரையும் அங்கு இருந்தவர்கள் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். கார் ஓட்டுனர் புஷ்பாகரன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வேங்கைவயல் வழக்கு; காவலர் முரளி ராஜாவிடம் சிபிசிஐடி விசாரணை.. வழக்கு விரைவில் முடிவுக்கு வரும் என நம்பிக்கை! - Vengaivayal Case Investigation