கரூர்: ஆண்டாங்கோவில் ஊராட்சி ரெட்டிபாளையம்புதூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் அஸ்வின் (12), இளங்கோ மகன் மாரிமுத்து (13), ஸ்ரீதர் மகன் விஷ்ணு ( 13) ஆகிய மூன்று மாணவர்களும் நேற்று (மே 13) மாலை விளையாட சென்றுள்ளனர்.
இரவு நேரமாகியும் மாணவர்கள் வீடு திரும்பாத நிலையில், பெற்றோர்கள் மாணவர்களை தேடி சென்ற நிலையில் மாணவர்கள் காணவில்லை என தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
பின்னர், அப்பகுதியை சேர்ந்த சக மாணவர்களிடம் விசாரித்த போது, மூன்று மாணவர்கள் அருகே உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து காவல் துறையினர் அந்தப் பகுதிகளில் உள்ள கிணறுகளில் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது, அங்குள்ள ஒரு கிணற்று அருகே மாணவர்களின் உடைமைகள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் தேடி பார்த்தபோது, மூன்று மாணவர்களும் தண்ணீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஆழமான பகுதிக்குள் சென்று தீயணைப்பு படை வீரர்கள் தேடியுள்ளனர்.
சுமார் 3 மணி நேர தேடலுக்கு பின்னர் நள்ளிரவில் மூன்று மாணவர்களும் கிணற்றில் இருந்து உயிரிழந்த நிலையில் தீயணைப்பு துறையின மீட்டனர். பின்னர், மாணவர்களின் சடலத்தை மீட்ட காவல் துறையினர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கரூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி கோடை விடுமுறை நாளில், வெயிலின் வெப்பத்தை தணிக்க விவசாய கிணற்றில் குளிக்குச் சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.