சென்னை: கீழ்பாக்கம் அடுத்த டிபி சத்திரம் ஜோதியம்மாள் நகரைச் சேர்ந்தவர் அமுதா. நேற்றிரவு இவர், தனது வீட்டின் வெளியே சகோதரி மற்றும் உறவினருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது மூன்று பேர் அங்கு வந்து அமுதா மீது பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பியுள்ளனர். ஆனால், பெட்ரோல் குண்டு வீட்டின் சுற்றுச்சுவர் மீது விழுந்து பாட்டில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பின்னர், தகவல் அறிந்து வந்த டிபி சத்திரம் போலீசார், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். விசாரணையில், டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்ற ஜன்டா, மனோஜ் குமார் உள்பட மூன்று பேர் தான் பெட்ரோல் குண்டு வீசியது என தெரிய வந்துள்ளது. மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், அமுதா வீட்டிற்கு அருகில் கடந்த 2023ஆம் ஆண்டு சந்தோஷ் கஞ்சா புகைத்துள்ளார். இதனை அமுதா கண்டித்தும் அவர்கள் கேட்கவில்லை. இதனால் டிபி சத்திரம் காவல் நிலையத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு புகார் கொடுத்ததை தொடர்ந்து, போலீசார் சந்தோஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து, அவர் சிறையில் இருந்து வெளியே வந்து கடந்த ஏப்ரல் மாதம் அமுதாவை பழிவாங்கும் நோக்கில், அவரது சகோதரியின் கணவர் செந்தில்குமாரை வெட்டியுள்ளார். இந்த வழக்கிலும் சந்தோஷ், மனோஜ் குமார் உள்ளிட்டோர் கைதாகி சிறைக்குச் சென்றனர். சந்தோஷ் தனது கூட்டாளிகளுடன் சிறையில் இருந்து நேற்று முன்தினம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில், ஆத்திரம் அடங்காத சந்தோஷ் மற்றும் அவரது கூட்டாளிகள், நேற்றிரவு அமுதா மீது பெட்ரோல் குண்டு வீசியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சந்தோஷ், மனோஜ்குமார் உள்ளிட்ட மூன்று பேரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பூந்தமல்லி அருகே ஆயில் குடோனில் தீ விபத்து.. ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்! - Kolappancheri FIRE ACCIDENT