கோயம்புத்தூர்: கேரள மாநிலம், பட்டனம்திட்டா பகுதியை சேர்ந்தவர் ஜேக்கப் ஆபிரகாம். இவர் தனது மனைவி ஷீபா மற்றும் 2 மாத குழந்தையான பேரன் ஆருண் மற்றும் மருமகள் அலினா தாமஸ் ஆகியோருடன் பெங்களூருக்கு இன்று காலை காரில் புறப்பட்டு சென்று கொண்டு இருந்தனர்.
கார் கேரள மாநிலத்தை கடந்து தமிழக பகுதியான சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் வந்து கொண்டிருந்தது. அப்போது மதுக்கரை அருகே கேரளாவுக்கு சென்று கொண்டு இருந்த ஈச்சர் லாரியும், ஜேக்கப் ஆபிரகாம் ஓட்டிச் சென்ற காரும் திடீரென நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் சம்பவ இடத்திலேயே ஜேக்கப் ஆபிரகாம், அவரது மனைவி ஷீபா மற்றும் பேரன் ஆருண் ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மருமகள் அலினா தாமஸ் ஆம்புலன்ஸ் மூலம் கோவை சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்த தகவல் அறிந்த மதுக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், லாரியை ஓட்டி வந்த கரூர் மாவட்டம் ரங்கநாதபுரத்தை சேர்ந்த கந்தன் என்பவரின் மகன் சக்திவேல் (39) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடி சிறுவன் மர்ம மரணம்; ' காவல்துறையினர் துரிதமாக செயல்படவில்லை' - கடம்பூர் ராஜூ குற்றசாட்டு
விபத்து குறித்து பொதுமக்கள்
விபத்து குறித்து அருகில் இருந்தவர்கள் கூறுகையில், இன்று காலை முதலே அந்த பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்தது. இதனால் சாலையில் நீர் தேங்கி வழுவழுப்பாக காணப்பட்டது. இந்நிலையில், மதியம் 12 மணி அளவில் அந்த வழியாக வந்த காரும், ஈச்சர் லாரியும் நேருக்கு நேராக பயங்கரமாக மோதிக்கொண்டன. இதனை அடுத்து அருகில் இருந்த அனைவரும் அங்கு சென்று மீட்பு பணியை துவக்கினோம். இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயத்துடன் இருந்த பெண்ணை மீட்டு கோவையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்.
கனரக வாகனங்களால் பதற்றம்
சேலத்தில் இருந்து நீலாம்பூர் வரை ஆறு வழிச்சாலை உள்ள நிலையில் நீலாம்பூரில் இருந்து மதுக்கரை வரை நான்கு வழி சாலையாக குறுகி உள்ளதால் இந்த பகுதியில் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த சாலையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான பணிகள் ஏதும் இன்னும் துவங்கவில்லை. சாலை மிகவும் குறுகியதாக இருப்பதால், கனரக வாகனங்கள் செல்லும்போது இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் செல்வோர் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டியது உள்ளது.
இதனை அரசு கருத்தில் கொண்டு உடனடியாக இந்த 20 கிலோமீட்டர் சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.