கடலூர்: ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கமலேஸ்வரி(65) - சுரேஷ்குமார்(70) தம்பதி. இந்த தம்பதி பல ஆண்டுகளாக நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள ஜோதிநகரில் வசித்து வந்தனர். சுரேஷ் குமார் நெல்லிக்குப்பத்தில் உள்ள இஐடி சர்க்கரை ஆலையில் மருந்தாளுனராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.
சுரேஷ்குமார் மறைவுக்கு பிறகு கமலேஸ்வரி அவரது மகன் சுகந்தகுமார்(40) மற்றும் பேரன் இஷான்(10) ஆகியோர் வசித்து வந்தனர். சுகந்தகுமார் திருமணம் ஆகி சில வருடங்களிலேயே மனைவியுடன் விவாகரத்து ஆன நிலையில் தாய் உடன் வசித்து வந்தார். சுகந்தகுமார் ஹைதராபாத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணி செய்து வரும் நிலையில் 15 நாட்கள் அலுவலகத்திலும், 15 நாட்கள் வீட்டில் இருந்தும் பணி செய்வது வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை(ஜூலை 12) இரவு ஹைதராபாத்தில் இருந்து வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அதே தினம் கமலேஸ்வரி உறவினர் வீட்டிற்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்று அவரும் இரவு 8 மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளார். இவர்களின் வீட்டு வேலை செய்யும் பணி பெண் சனிக்கிழமை காலை வீட்டிற்கு வந்து பார்க்கும் பொழுது வெளிப்புற இரும்பு கேட் பூட்டி இருந்ததால் வீட்டில் யாரும் இல்லை என நினைத்து திரும்பிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், இன்று(ஜூலை 15) காலை கமலேஸ்வரி இல்லத்திற்கு வந்த பணிப்பெண் ஜன்னல் வழியாக புகை வந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த நெல்லிக்குப்பம் காவல்நிலைய போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மூவரும் ரத்த வெள்ளத்தில் வெவ்வேறு அறைகளில் சடலமாக கிடந்துள்ளனர்.
சடலங்களை மீட்ட போலீசார் உடற்கூராய்வுக்காக கடலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ இடத்தில் மோப்ப நாய்கள், கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், "ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் இது கொலையாக இருப்பது போல் தெரிகிறது" என்றார்.
கலமேஸ்வரி இல்லத்தில் பணியாற்றும் பணிப்பெண் ராதா கூறுகையில், "கடந்த சனிக்கிழமை காலை நான் வீட்டிற்கு வந்தபோது கதவு அடைக்கப்பட்டிருந்து. செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர்கள் எடுக்கவில்லை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், இன்று காலை வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தேன்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ராமேஸ்வரம் கோயிலில் பீகார் பக்தர் மீது பணியாளர்கள் தாக்குதல் என புகார்