கன்னியாகுமரி: நாகர்கோவிலை அடுத்த கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள அருகுவிளை வாட்டர் டேங்க் ரோட்டைச் சேர்ந்தவர் பிரபாகரன் (65). இவர் நாகர்கோவில் அருகே தேரேகால் புதூர் அக்ஷயா கார்டன் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி மாலை பணியை முடித்துவிட்டு, தனது மொபட் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்ட பிரபாகரன், நிறுவனத்தின் அருகிலேயே கீழே விழுந்தவாறு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதையடுத்து, இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பிரபாகரனின் மகன் அனீஷ்குமார், மருத்துவமனையில் தனது தந்தைக்கு வலிப்பு நோய் உண்டு எனத் தெரிவித்ததுடன், இதன் காரணமாக அவர் வண்டியிலிருந்து மயங்கி விழுந்து இருக்கலாம் எனவும், கீழே விழுந்ததில் தலையில் காயம் பட்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
ஆனால், மருத்துவமனையில் இருந்து சுசீந்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் பேரில் வந்த போலீசார், பிரபாகரனின் மகன் அனீஷ்குமாரிடம் புகாரினைப் பெற்று விசாரணை நடத்தி உள்ளனர். இதற்கிடையே, சிகிச்சையில் இருந்த பிரபாகரன் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, அனீஷ்குமார் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டாம் எனவும், உடலை வீட்டிற்கு கொண்டு செல்வதாகவும் மருத்துவர்களிடம் கூறியுள்ளார். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, அனீஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, வலிப்பு வந்து கீழே விழுந்ததில் பிரபாகரன் இறந்ததாக வழக்குப்பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிரேதப் பரிசோதனையில் பிரபாகரன் கழுத்தில் ஆழமாக வெட்டுக் காயங்களும், தலையில் வெட்டுக் காயமும் இருப்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இதில், பிரபாகரன் விழுந்து கிடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பிரபாகரனை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் வெட்டி கீழே தள்ளியதும், துடிதுடித்து கீழே விழுந்த பிரபாகரன் மீண்டும் தனது இருசக்கர வாகனத்தில் எழுந்து அமரும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.
இதனை அடுத்து, போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு, அந்த இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் எனத் தேடி வந்தனர். ஆனால், போலீசார் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், விசாரணையின் கோணத்தை மாற்றிய போலீசார், பிரபாகரனின் குடும்பம் குறித்து விசாரித்தனர்.
அப்போது, பிரபாகரனின் குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் இருந்தது தெரியவரவே, பிரபாகரனைக் கொலை செய்தது அவரின் நெருங்கிய உறவினர்களாக இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. இந்நிலையில், கொலையாளிகளைப் பிடிப்பதற்காக சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான தனிப்படையினர், தேரூர் நான்கு வழிச் சாலை அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் வந்ததைப் பார்த்த போலீசார், அவர்களைப் பிடித்து விசாரித்தனர். அப்போது மூவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே, போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், அதில் இருவர் பிரபாகரன் விழுந்து கிடந்த இடத்தின் அருகாமையில் இருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
பின்னர் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அவர்கள் கிருஷ்ணன் கோவில் அருகுவிளை கிழக்கு தெருவைச் சேர்ந்த அனீஷ்குமார் (33), கோட்டார் தட்டான் விளை பாரதி நகரைச் சேர்ந்த சுதன் (22) மற்றும் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் கட்டையன் விளையைச் சேர்ந்த ராஜா (25) என்பது தெரியவந்தது. மேலும், இந்த மூவரும் தான் பிரபாகரனை கொலை செய்தது என்பதும், இதில் அனிஷ்குமார் பிரபாகரனின் மகன் என்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வாக்குமூலம்: இந்த கொலை குறித்து போலீசாரிடம் அனீஷ்குமார் அளித்துள்ள வாக்குமூலத்தில், "நான் டிப்ளமோ படித்துவிட்டு தற்போது நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிச்சன் கபோர்ட் வேலை செய்து வருகிறேன். எனக்கும், கிருஷ்ணன் கோவில் காமராஜர்புரம் பிரான்சிஸ் சேவியர் என்பவரின் மகள் அனுஷாவிற்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
எங்களுக்கு அதின் என்ற நான்கு மாத ஆண் குழந்தை உள்ளது. எனது அப்பா பிரபாகரன். தேரேகால் புதூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அருகில் உள்ள ஒரு சர்வீஸ் சென்டரில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். எனது உடன்பிறந்த அண்ணன் ராஜேஷ் குமார், சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறான். எனக்கு திருமணம் முடிந்து 4 வருடமாக குழந்தை இல்லாமல் இருந்தது.
இது சம்பந்தமாக அடிக்கடி எனது அப்பா என்னை எங்கள் குடும்பத்தார் மத்தியில் வைத்து அவதூறாகப் பேசுவார். இந்நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நான் குடும்பத்துடன் வீட்டில் இருக்கும்போது, எனது அப்பா என்னை நீ குழந்தை பெற வக்கில்லாதவன். நீ எல்லாம் வாய் பேசாதே, நீ இருப்பதை விட செத்து விடலாம் எனப் பேசினார். ஏற்கனவே, குழந்தை இல்லாத மன வருத்தத்தில் இருந்த எனக்கு, எனது அப்பா பேசியது மிக வருத்தத்தை தந்தது.
எனவே, நான் எனது மனைவியை அழைத்துக் கொண்டு புத்தேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று, கடந்த டிசம்பர் மாதம் எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனாலும், எனது அப்பா எங்கள் குடும்பத்தார் மத்தியில் என்னை குழந்தை பெற வக்கில்லாதவன் என்று சொன்னது எனது மனதை விட்டு மாறவில்லை. அதை நினைத்து, நான் வேலை செய்யும் இடத்தில் அழுது கொண்டே இருப்பேன்.
அப்போது, என்னுடன் கடந்த ஏழு வருடமாக வேலை செய்து வரும் ராஜாவும், இரண்டு வருடமாக வேலை செய்து வரும் சுதனும், எனக்கு ஆறுதல் சொல்வார்கள். இந்நிலையில், ஒரு நாள் நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, ராஜா என்னிடம் குறைந்த விலையில் வீடு வாங்க வேண்டும் என்று சொல்லி இருந்தான். வீடு வாங்குவதற்கு 4 லட்சம் ஆகும் என்றும் சொன்னான்.
இதைத் தொடர்ந்து, மீண்டும் இந்த பேச்சு வரும்போது, ராஜா என்னிடம் வீடு வாங்குவதற்கு ஏதாவது பண உதவி செய்வாயா என்று கேட்டான். அப்போது எனக்கு என் அப்பா பேசிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. உடனே என் அப்பாவை தீர்த்துக் கட்டினால், நான்கு லட்சம் தருவதாகக் கூறினேன். அதன்படி, ராஜாவும், சுதனும் சேர்ந்து எனது அப்பாவை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.
மேலும், நாங்கள் மூன்று பேரும் இங்கே இருந்தால் போலீசார் கைது செய்து விடுவார்கள் என்று நினைத்து, எங்கேயாவது தப்பி விடலாம் என்று தேரூர் வழியாக வந்து கொண்டிருக்கும் பொழுது, போலீசார் எங்களைக் கைது செய்தனர்" என வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த மூவரையும் கைது செய்த போலீசார், நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மூதாட்டியை கடித்து குதறிய முதலை.. அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி - A Crocodile Bit An Old Woman In TN