சென்னை: சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் குடியிருக்கும் சுமதி என்பவர் வீட்டில், சிலைகள் சந்தேகத்திற்கு இடமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிலை திருட்டு தடுப்புப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, சிலை திருட்டு தடுப்புப் பிரிவு தலைமையக காவல் ஆய்வாளரும், தனிப்படையினரும் சுமதி வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அந்த சோதனையில், உலோகத்தினாலான நாகாத்தம்மன் சிலை, உடைவாள் உட்பட மூன்று சிலைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் சுமதியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சென்னை முகப்பேரைச் சேர்ந்த கலியமூர்த்தி, தங்கராஜ் மற்றும் சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணன் ஆகிய மூவரும் மேற்கண்ட சிலைகளை ஒரு கோயிலிலிருந்து திருடியது தெரிய வந்துள்ளது.
மேலும், திருடப்பட்ட சிலைகள் சக்தி வாய்ந்தது என்று சுமதியிடம் சொன்னதாகவும், இந்த சிலைகளை பாதுகாப்பாக வைத்திருந்தால் சரியான நேரத்தில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்கலாம் என்று அவர்கள் உறுதி அளித்ததாக சுமதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சுமதியும் அவரது கணவர் பிரகாசும் சிலை குறித்து எந்த ஆவணங்களையும், முகாந்திரத்தையும் சமர்ப்பிக்காத காரணத்தினால், சிலைகள் தனிப்படையினரால் கைப்பற்றப்பட்டு, வழக்குப்பதிவு செய்து சுமதி மற்றும் பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், சுமதி அளித்த தகவலின் பேரில், முகப்பேரைச் சேர்ந்த கலியமூர்த்தி, தங்கராஜ் ஆகியோரையும் தனிப்படையினர் கைது செய்து தங்கராஜிடமிருந்து மற்றொரு அம்மன் சிலையையும் கைப்பற்றியுள்ளனர். பின்னர், நான்கு பேரும் எழும்பூர் பெரு நகர தலைமை குற்றவியல் நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ராஜேஷ்கண்ணன் என்பவர் சிலை திருட்டு வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இந்த சிலைகள் எந்த கோயிலில் இருந்து எடுக்கப்பட்டன? இதில் மேலும் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்