திருவள்ளூர்: நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று (ஏப்.19) வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருத்தணி சட்டமன்றத் தொகுதியில் உள்ள நெமிலி வாக்குச்சாவடி எண் 269-இல் ஓட்டு போடுவதற்காக ஸ்ரீதர் என்ற இளைஞர் தனது தந்தையான 72 வயதுடைய கனகராஜ் என்பவரை அழைத்து வந்துள்ளார்.
அப்போது, வாக்குச்சாவடி மையத்திற்கு உள்ளே வந்த கனகராஜ் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து, அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நெமிலி வாக்குச்சாவடி எண் 269-ல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு முன்னதாக, கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதியில் உள்ள கொண்டையம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 77 வயதுடைய சின்ன பொண்ணு என்ற மூதாட்டி அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் வாக்களிக்க இன்று (ஏப்.19) காலை சென்றுள்ளார்.
அங்கு, சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்பட்ட சின்னப் பொண்ணு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் மயங்கி விழுந்த அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோன்று, சேலம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பழைய சூரமங்கலம் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்கச் சென்ற 65 வயதுடைய பழனிசாமி என்ற முதியவர் வாக்களிக்க வரிசையில் காத்திருந்தபோது, வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் திடீரென மயங்கி விழுந்தார்.
இதனை அடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் முதியவர் பழனிசாமியை அருகாமையில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு பழனிசாமியை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.
வாக்குப்பதிவு மையங்களில் முதியவர்கள் வாக்களிக்க உதவிடும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையிலும், வெயிலின் தாக்கத்தால் முதியவர்கள் மூன்றுபேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவங்கள் அரங்கேறியுள்ளது வாக்காளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையம் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தங்கள் இல்லங்களிலேயே தபால் வாக்கு அளிக்கும் முறையைச் செயல்படுத்தியது இந்திய தேர்தல் ஆணையம். ஆனால் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இது போன்ற ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் அப்போதுதான் வெயிலின் தாக்கத்தால் முதியோர்கள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என்று வாக்காளர்கள், தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்..தென்காசியில் மாற்றுத்திறனாளிகள் வாக்களித்து நெகிழ்ச்சி!