தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் காவல் சரகம், மருதநல்லூர் கிராமத்தில், தஞ்சை மாவட்ட காவல்துறை உயர் அலுவலர்களுக்கு, குறிப்பிட்ட எண் கொண்ட கருப்பு நிற சொகுசு ஜீப் குறித்து, ரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நாச்சியார்கோயில் போலீசார் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுச் சம்மந்தப்பட்ட ஜீப்பை தீவிரமாகத் தேடி வந்தனர்.
அப்போது காவல்துறையினர் எதிர்பார்த்தபடியே குறிப்பிட்ட கருப்பு நிற ஜீப் ஒன்று வந்தது. அதில் 3 பேர் பயணித்துள்ளனர். அதனைத் தடுத்து நிறுத்தி காவல்துறையினர் சோதனையிட்டனர். அப்போது அதிலிருந்த இரண்டு பட்டாக்கத்திகள், இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்களைக் கைப்பற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த மூவரையும் நாச்சியார்கோவில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் மேலவிசலூரை சேர்ந்த கரண்ராஜ், தில்லையம்பூரை சேர்ந்த ராம்குமார், மற்றும் திருச்சி கே.கே.நகர்ப் பகுதியைச் சேர்ந்த அஜய்குமார் என்பது தெரியவந்தது.
சந்தேகத்தின் பேரில் இவர்களிடம் காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டதில், சில நாட்களுக்கு முன்பு மேலவிசலூர் கிராமத்தைச் சேர்ந்த கரன்ராஜின் சகோதரி திருச்சியைச் சேர்ந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த நபரைக் காதலித்து திருமணம் செய்துள்ளதாகத் தெரிகிறது.
அவரிடமிருந்து தனது சகோதரியை மீட்க வேண்டும் என்பதற்காக இவர்கள் திட்டமிட்டு திருச்சிக்குச் சென்று வந்தது தெரியவந்தது. மேலும் இவர்கள் திருச்சியில் உள்ள சகோதரி வீட்டிற்குச் சென்று அங்கு அவர்களை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் இவர்கள் மூவர் மீது தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்திய சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கைது செய்த மூவரையும் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி, சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கில் கரன்ராஜின் நண்பர் தில்லையம்பூர் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பவரிடமிருந்து ஏர் கன் வகையைச் சேர்ந்த துப்பாக்கி ஒன்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதனை முதல் தகவல் அறிக்கையில் காவல்துறையினர் குறிப்பிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், ஆயுதங்களுடன் காரில் வந்த நபர்களைக் கைது செய்து சிறையில் அடைத்த இச்சம்பவம் நாச்சியார்கோவில் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வானிலை மாற்றத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய இன்சாட் 3டிஎஸ்.. விண்ணில் சீறிப்பாய்ந்தது..!