சென்னை: சென்னையில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 28 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதில் நேற்று கைது செய்யப்பட்ட கோபி, குமரன் மற்றும் ராஜேஷ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை முடித்து, இன்று எழும்பூர் ஐந்தாவது நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அடுத்த மாதம் 6ஆம் தேதி வரை மூவருக்கும் நீதிமன்றக் காவல் வழங்கி உத்தரவிட்டார்.
அதேபோல், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், தனியார் உணவு டெலிவரி செய்யும் கம்பெனியின் உடை அணிந்து வந்து வெட்டிக் கொலை செய்த மணிவண்ணன் என்பவரை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து செம்பியம் போலீசார் விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில், காவல் முடிவடைந்த நிலையில், அவரும் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கும் அடுத்த மாதம் 6ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்ற நபர் சம்போ செந்திலின் கூட்டாளி என்பது தெரியவந்துள்ளது. மேலும், சம்போ செந்தில் கிழக்கு கடற்கரை சாலையில் பதுங்கி இருந்தபோது, அவருக்கு திருவேங்கடம் தான் அடைக்கலம் கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருவேங்கடத்திடம் செம்பியம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். விசாரணைக்குப் பின் திருவேங்கடத்தை நாளை (ஆக.24) எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி திருவேங்கடம் கைது! - armstrong murder case