திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த நாயுடுமங்கலம் கூட்டுச் சாலையில் கடந்த 1989 ஆம் ஆண்டு பாமக தலைவர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கத்தின் அக்னி கலசம் நிறுவப்பட்டது. இந்த சூழலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாயுடுமங்கலம் கூட்டுச் சாலை சந்திப்பில் பேருந்து நிறுத்தம் கட்ட வேண்டும் என வன்னியர் சங்கத்தின் கலசம் அகற்றப்பட்டது.
அப்போது மீண்டும் அக்னி கலமானது பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்படும் என வருவாய்த் துறையினர் உறுதி அளித்ததின் பேரிலேயே அக்னி கலசம் அகற்றப்பட்டது. ஆனால் பேருந்து நிறுத்தம் கட்டப்பட்ட பின் அக்னி கலசம் வைக்க வருவாய்த் துறையும் காவல்துறையும் அனுமதி அளிக்காததால் வன்னியர் சங்கம் மற்றும் பாமகவினர் பலகட்ட போராட்டங்களை நடத்தினர்.
இந்த சூழலில் கடந்த 10 ஆம் தேதி அதிகாலை வன்னியர் சங்கத்தின் அக்னி கலசம் அனுமதியின்றி நாயுடுமங்களம் பேருந்து நிறுத்தம் அருகே வைக்கப்பட்டது. பின்னர் அனுமதியின்றி வைக்கப்பட்ட அக்னி கலசத்தை காவல்துறை பறிமுதல் செய்யப்பட்டதுடன் 15 நபர்களைக் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து பாமக சார்பில் அக்னி கலசம் நிறுவப்படும் என்று அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், இன்று (மார்ச் 14) திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாமகவினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் இருசக்கர வாகனம், கார்கள் போன்றவற்றில் பேரணியாக வந்து நாயுடுமங்கலம் கூட்டு சாலை சந்திப்பு பேருந்து நிறுத்தம் அருகே அக்னி கலசத்தை நிறுவினர்.
ஆயிரக்கணக்கான வன்னியர் சங்கத்தினர் மற்றும் பாமகவினர் திரண்டதால் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் காயம் - மு.க.ஸ்டாலின் வருத்தம்!