தூத்துக்குடி: தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோமஸ்புரம் அருகே அமைந்துள்ளது ராஜீவ் காந்தி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, இங்கு சுமார் 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில் இங்கு பல்வேறு வீடுகளில் மேற்கூரை பழுதாகி இடியும் நிலையில் உள்ளதாக அங்குள்ள குடியிருப்பு வாசிகள் தெரிவிக்கின்றனர்.
நேற்று நள்ளிரவு வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் 1வது பிளாக்கில் மூன்றாவது மாடியில் ஆதி ராஜ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இதில், நேற்று இரவு ஆதிராஜன் மகன் அருண்பாண்டியன் வீட்டில் உள்ள அறையில் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது குடியிருப்பின் மேற்கூரை இடிந்து அவர் மீது விழுந்துள்ளது. இதில் அருண் பாண்டியன் தலை மற்றும் மார்புப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து குடியிருப்பு வாசிகள் கூறியதாவது, "இங்கு பல வீடுகள் பழுதாகி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
ஆனால் குடியிருப்புகளின் வெளிப்புறம் தோற்றம் மட்டும் புதியதது போன்று தெரிவதற்காக கலர் கலரான பெயிண்டுகள் அடித்து வைத்துள்ளன. வீட்டின் உட்புறத்தைப் பற்றி அதிகாரிகள் யாரும் கவலை கொள்வதில்லை. இது குறித்து குடியிருப்போர் நல சங்கம் சார்பில் வீட்டு வசதி வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் இங்குள்ள குடியிருப்பு வாசிகள் அனைவரும் தினம், தினம் அச்சத்தில் வாழ்ந்து வருகிறோம். இதனைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் வீட்டு வசதி வாரியம் பழுதான வீடுகளை பராமரிக்க வேண்டுமென" அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பிறந்து 38 நாட்களே ஆன குழந்தையை தண்ணீர் டிரம்மில் போட்டு கொன்ற தாத்தா.. போலீஸ் விசாரணையில் பகீர் தகவல்!