தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்கு தான் தசரா பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், தூத்துக்குடி மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து, 10 நாள்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.
சூரசம்ஹாரம்: அந்த வகையில், இந்த ஆண்டு திருவிழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 12ஆம் தேதி நள்ளிரவு குலசேகரப்பட்டினம் கடற்கரையில் நடைபெற உள்ளது. இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 10 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சூரசம்ஹாரம் நிகழ்ச்சியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவிற்காக 9 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 30 டிஎஸ்பிக்கள் தலைமையில், 4 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
நடமாடும் கண்காணிப்பு கேமராக்கள்: சூரசம்ஹாரம் நடைபெறும் பகுதி முழுவதும் சுமார் 250-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மற்றும் நடமாடும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு நடைபெற உள்ளது. திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில், காவல்துறை உடை இல்லாமல் சாதாரண உடையில் ஆண், பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இதையும் படிங்க: குலசை தசரா: கேட்ட வரம் அருளும் முத்தாரம்மன்.. விரத முறைகளும் வேடங்களின் பலன்களும் குறித்த சிறப்பு தொகுப்பு!
சாதி அடையாளங்களுக்கு தடை: திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் சாதி அடையாளங்களை தெரிவிக்கும் வகையில், கொடிகள் மற்றும் டீ-ஷர்ட் அணிந்து வரக்கூடாது. அவ்வாறு அணிந்து வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று வேடமணியும் பக்தர்கள் காவல்துறை போன்று வேடம் அணியக்கூடாது என தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், திருவிழாவிற்கு ஆயுதங்களை எடுத்து வரக்கூடாது. தடையை மீறி வருபவர்களின் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்.
போக்குவரத்து ஏற்பாடுகள்: போக்குவரத்துக்காக மூன்று தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் 30 தற்காலிக பார்க்கிங் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 17 ஆயிரம் வாகனங்கள் நிற்கும் அளவிற்கு வாகன பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் ஆலயம் வரை ஒரு வழி பாதையாகவும், பின்னர் பக்தர்கள் தரிசனம் முடிந்த பின்பு மற்றொரு பாதை வழியாகவும் செல்ல மூன்று வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட உள்ளனர்.
அடிப்படை வசதிகள்: இந்த விழாவைக் காண 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் முறையான குடிநீர் வசதி, சுகாதார வசதி மற்றும் 24 மணி நேரம் செயல்படக்கூடிய மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ் வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் பாதுகாப்பாக தரிசனம் செய்துவிட்டு செல்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.