தூத்துக்குடி: தூத்துக்குடி வி.இ.சாலையில் உள்ள அந்தோணியார் ஆலயம் அருகே சாலையோரம் தங்கி யாசகம் பெற்று வரும் வேலூரை சேர்ந்த இளம்பெண் சந்தியா கணவனால் கைவிடப்பட்ட நிலையில் தனது நான்கு மாத பெண் குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 9ம் தேதி அதிகாலை சந்தியா தனது 4 மாத கைக்குழந்தையுடன் சாலையின் ஓரத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவர் 4 மாத பெண் குழந்தையை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து சந்தியா தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வந்தனர்.
இந்த குழந்தை கடத்தல் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் 10 தனிப் படைகள் அமைக்கப்பட்டு தூத்துக்குடி மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மேலும், திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, விருதுநகர் ஆகிய பகுதிகளுக்கும் காவல்துறையினர் சென்று குழந்தை கடத்தலில் ஈடுபடும் கும்பல் குறித்தும், கடத்தலில் ஈடுபட்ட நபர் குறித்தும் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், 4 மாத கைக்குழந்தையை கடத்தியவர்களின் புகைப்படத்தை காவல்துறையினர் நேற்று வெளியிட்டு தகவல் தெரிவிப்பவர்களுக்கு உரிய சன்மானம் வழங்கப்படும் என அறிவித்திருந்தனர். அதன்படி தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வைத்து கருப்பசாமி என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான ராஜனை காவல்துறையினர் தேடி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாஜக கூட்டணியில் பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு